ஜிவி பிரகாஷின் ஜெயில் படத்தை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்
சென்னை : இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயில்.
ஜிவி பிரகாஷ், அபர்ணதி இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜெயில் படம்
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கடைசியாக காவியத் தலைவன் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க ஜெயில் படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணதி.

தனுஷ் -அதிதி ராவ் பாடிய பாடல்
படத்தில் ரோனித் ராய், யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பாடலை எழுதி தனுஷ் பாடியிருந்தார். அவருடன் இணைந்து அதிதி ராவ் சொந்தக் குரலில் பாடியிருந்தார். காத்தோடு காத்தானேன் என்று துவங்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

யூடியூபில் முதலிடம்
சென்னை வாழ்க்கை மற்றும் காதலை இந்தப் படம் கருவாக கொண்டுள்ளது. இந்தப் பாடலில் ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணதிக்கு நெருக்கமான காட்சிகள் இருந்தன. இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்தது.

ஸ்டூடியோ க்ரீன் ரிலீஸ்
இந்நிலையில் படத்தை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதை ஜிவி பிரகாஷும தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களுக்கு பிறகு ஸ்டூடியோ க்ரீன் 3வது முறையாக ஜிவி பிரகாஷின் படத்தை வெளியிட உள்ளதையும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி
மேலும் இதுகுறித்த போஸ்டரையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெயில் படத்தின் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











