தனுஷுக்கு குரு... வேற யார் ரஜினிதான்!
அது தனுஷ் ஆரம்ப காலத்தில் நடித்த படம் ஒன்றின் பிரஸ் ஷோ. இடைவேளையின் போது வெளியே வந்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் அடித்த கமெண்ட்: 'இதெல்லாம் ஒரு மூஞ்சினு வெச்சிகிட்டு ஹீரோவா நடிக்க வந்துடுச்சு'.
அந்த தனுஷ் தான் தேசிய விருது நாயகன் ஆனார். தனுஷின் வளர்ச்சியை தூரமாக நின்று பார்த்தால் ஒரே இரவில் புகழ் உச்சிக்கு போனாற்போல் தான் தெரியும். ஆனால் அவரது கடின உழைப்பு தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
கஸ்தூரிராஜா, தான் கடைசியாக எடுத்த இரண்டு படங்கள் சரியாக போகாததால் முழுக்க முழுக்க இளமை ததும்ப எடுக்க திட்டமிட்ட படம்தான் துள்ளுவதோ இளமை. அந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது வேறொரு நடிகரை. செல்வராகவனின் வற்புறுத்தலால் தான் தனுஷை நடிக்க வைத்தார். படத்திற்கு கதை எழுதிய செல்வராகவனின் மனதில் இருந்தது தனுஷ் தான்.

விடலைப் பையன் ரோலை கனகச்சிதமாக செய்து அப்ளாஸை அள்ளினார் தனுஷ். அடுத்த ஆண்டான 2003 தான் தனுஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தனுஷின் நடிப்பாற்றலை முழுவதுமாக காட்டியது செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த காதல் கொண்டேன்.
இன்னொரு புறம் திருடா திருடி படம் கமர்ஷியலாகவும் தனுஷை வெற்றி பெற வைத்தது. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அந்த மன்மத ராசா பாடலும் அதற்கான நடனமும் தான். அந்த பாடலில் தனுஷ் போட்ட குத்தாட்டத்தை பார்த்து தியேட்டரில் ஆடாதவர்கள் யாருமே இல்லை எனலாம். ஆனால் அந்த பாடல் காட்சி படமானபோது தனுஷுக்கு 100 டிகிரி காய்ச்சல் என்றால் நம்ப முடிகிறதா? அதோடு போட்ட ஆட்டம் தான் அவரை உச்சிக்கு கொண்டு சென்றது.
2004ம் ஆண்டும் தனுஷுக்கு இனிமையான ஆண்டு தான். யாருமே எதிர்பாராத வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கரம் பிடித்தார் தனுஷ். அப்போது அவருக்கு வயது வெறும் 21 தான். ரஜினியே டிக் அடித்தார் என்றால் மாப்பிள்ளையின் கேரக்டர் எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையுமே எளிதில் அடைந்த தனுஷ் அதை தக்க வைக்க போராடியது ஒரு சக்சஸ் ஸ்டோரியாகவே எழுதலாம். படங்களை தேர்வு செய்வதிலேயே தனுஷின் உள்ளேயே ஒரு இயக்குநர் இருக்கிறான் என்பது தெரியும்.
பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலமும், அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டையும் தனுஷின் இன்னொரு நடிப்பு பரிணாமத்தை காட்டியது. புதுப்பேட்டையில் அசர வைத்த தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம் மூலம்தான் தனது மாமனார் போல காமெடி உள்பட எல்லாமும் எனக்கு அத்துப்படி என்று காட்டினார்.
பொல்லாதவன் மூலம் தனுஷை தமிழ்நாட்டு ப்ரூஸ்லீயாக்கினார் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தில் கேபி கருப்பாகவே வாழ்ந்து தேசிய விருது வாங்கினார் தனுஷ். இதுவரை சூப்பர் ஸ்டாருக்கே கிடைக்காத தேசிய விருது அவரது மருமகனுக்கு சில படங்களிலேயெ, மிக இளம் வயதிலேயே கிடைத்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக தனுஷ் செய்த ஹோம்வொர்க் ஏராளம். தேசிய விருது நாயகன் உலக அளவில் புகழ் பெற்றது ஒரே ஒரு பாடலில். அது கொலவெறி.
தனுஷின் நடிப்பில் இருப்பது போலவே அவரது குரலிலும் நம்மை ஈர்த்துவிடும் ஏதோ ஒரு வசீகரம் ஒளிந்திருக்கும். அது நம்மை நம்மை அறியாமலேயே ஆட வைக்கும், கண்ணீர் விட வைக்கும். அதுதான் உலக ரசிகர்களையே ஈர்த்தது.
கோலிவுட்டைத் தாண்டி பாலிவுட்டிலும் ரசிகர்களை பெற்றார் தனுஷ். அந்த அறிமுகமே அவரை பாலிவுட்டுக்கு ராஞ்சனா மூலம் இழுத்து சென்றது. நடிப்புக்குதான் மொழி கிடையாதே? அங்கு தனுஷின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு.
தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொள்ளும் சைக்கோ முதல், தான் காதலித்த பெண்ணின் அண்ணனிடமே பணம் கறந்து முன்னேறும் காமெடி ஹீரோ வரை தனுஷ் எந்த பாத்திரத்துக்கும் பொருந்தி போகிறவர். மரியான் படத்தில் தனுஷை தவிர வேறொரு நடிகரை அந்த பாத்திரத்துக்கு பொருத்தி பார்க்கவே முடியாது. அமிதாப்பை மட்டுமே இயக்கி கொண்டிருந்த பால்கி தனுஷின் நடிப்பை ஆகா ஓஹோ வென புகழ்கிறார்.
தான் வளர்ந்தது மட்டுமில்லாமல் காம்பியராக இருந்த சிவகார்த்திகேயனையும் முன்னணி ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார் தனுஷ்.
இடையில் சில படங்கள் வரிசையாக தோல்விகள். வேலையில்லா பட்டதாரி படத்தை ஒரு சேனலுக்கு சாட்டிலைட் உரிமைக்காக பேச அவர்களோ உங்கள் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிசட்டையையும் தந்தால்தான் வாங்குவோம் என்றார்கள். இலேசான புன்முறுவல் மட்டும்தான் தனுஷின் பதில். ஆனால் வேலையில்லா பட்டதாரி தந்த வெற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் அதுதான்.
தனுஷுக்கு கமர்ஷியல் சினிமாவின் ஃபார்முலாவும் தெரியும். பெர்ஃபார்மென்ஸில் பின்னி எடுக்கவும் தெரியும். இதோ இரண்டு படங்களை ஒரே நேரத்தில் முடித்துவிட்டு தனது கனவுப் படமான வடசென்னையில் பிஸியாகிவிட்டார்.
இப்போது இருக்கும் இளம் நடிகர்களிலேயே நடிக்கத் தெரிந்த நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும்தான். தனக்கு விருது வழங்கிய ஒரு விழாவில் விஜய் சொன்ன கமெண்ட் 'தனுஷ் என்னை விட பெட்டர் ஆக்டர்'.
இவ்வளவு உயரத்துக்கு போயும் கூட மாமனார் ரஜினியிடம் இருக்கும் அதே எளிமையை தான் கடைபிடிக்கிறார் தனுஷ். உழைப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், எளிமை இவைதான் தனுஷை உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது!


Click it and Unblock the Notifications











