வெற்றிக் களிப்புடன் பிறந்த நாள் கொண்டாடும் 'விஐபி' தனுஷ்
சென்னை: முன்னெப்போதும் இல்லாத சந்தோஷக் களிப்புடன் இந்த ஆண்டு தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் தனுஷ்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற இளம் நடிகர் தனுஷ். இந்த ஆண்டு அவருக்கு 32வது பிறந்த நாள்.
துள்ளுவதோ இளமைதான் அவர் நடிகராக அறிமுகமான முதல் படம். அந்தப் படத்திலேயே அவரை இளம் புரூஸ் லீ என்றுதான் மீடியா உலகம் குறிப்பிட்டது.

திட்ட மிட்ட வாழ்க்கை
மற்ற நடிகர்களுக்கும் தனுஷுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தான் என்னவாக ஆக வேண்டும், தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பக்காவாக திட்டமிட்டு நிறைவேற்றியவர் தனுஷ்தான்.

திருமணம் - குழந்தைகள்
தன் 21வது வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏன் இத்தனை இளம் வயதில் திருமணம் என்று கேட்டபோது, என் வாழ்க்கையை நான் சரியாகத்தான் திட்டமிடுகிறேன். இந்த வயதில் திருமணம் செய்தால்தான், உரிய வயதில் குழந்தை பெற்று, பின் அவர்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொடுக்க முடியும் என்றார். அதே போல அடுத்தடுத்து யாத்ரா, லிங்கா என இரு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

தேசிய விருது
தன் 27வது வயதில் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருதினைப் பெற்ற தனுஷ், அடுத்த ஆண்டே சொந்தமாக வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்த நிறுவனம் ஆரம்பித்து படங்கள் தயாரித்தார்.

தயாரிப்பாளர்
முதல் படம் 3 சுமாராகப் போனாலும், அதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் அவரை உலகப் புகழ் பெற்ற நடிகராக்கியது. அடுத்தடுத்து அவர் தயாரித்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படங்கள் சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

பன்முகங்கள்
வெறும் நடிப்போடு நின்றுவிடவில்லை தனுஷ். ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தவர், சிவகார்த்திகேயன், அனிருத் போன்றவர்களின் திறமை அறிந்து வாய்ப்பு நல்ல வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தவர். பாடகராக, பாடலாசிரியராகவும் இப்போது பரிமளித்து வருகிறார்.

பாலிவுட்டில்
பல கேலிப் பார்வைகளுக்கு நடுவே தனது இந்திப் பட பிரவேசத்தை ஆரம்பித்தார் தனுஷ். ஆனால் முதல் படமான ராஞ்சனா ப்ளாக் பஸ்டர். ரூ 100 கோடி வசூல் செய்து கலக்கியது. இப்போது அமிதாப்புடன் ஷமிதாப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர்
தனுஷின் அடுத்த இலக்கு, இயக்குநராவது. அதை அவர் தனியாக நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே அவர் தான் நடித்த, தயாரித்த படங்களில் மறைமுக இயக்குநராகப் பணியாற்றிவர்தான்.

நம்பிக்கை
'இயக்குநர் தனுஷ்' என்ற பொறுப்போடு அவர் வெளிப்படையாக ஒரு படம் இயக்கினால் அது நிச்சயம் வெற்றிப் படமாகவே அமையும் என திரையுலகம் அழுத்தமாக நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன்தான் அவரும் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி
தனுஷுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது 2011. இந்த ஆண்டுதான் அவரது ஆடுகளம் வெளியாகி தேசிய விருது பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 படங்கள் தமிழில் சரியாகப் போகவில்லை. அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இந்த ஆண்டு வேலையில்லா பட்டதாரி வசூலைக் குவித்து வருகிறது. அந்த வகையில் தனுஷுக்கு இது மறக்க முடியாத பிறந்த நாள்.

மிரள வைக்கும் நடிப்பு
தனுஷின் வளர்ச்சி, அவரது அபார நடிப்பாற்றல் கோலிவுட்டில் உள்ள பல நடிகர்களையும் மிரள வைத்துள்ளது என்றால் மிகையல்ல. அவரை மிக சாதாரணமாக எடை போட்ட அத்தனை சினிமாக்காரர்களும் இன்று அவரைப் பார்த்து பிரமிப்பதாக வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அதுதான் அவரது வெற்றி!
வாழ்த்துகள் தனுஷ்!


Click it and Unblock the Notifications











