Sarathkumar Net Worth: பேப்பர் பாய் முதல் போர் தொழில் ஹீரோ.. சரத்குமாரின் சொத்து மதிப்பு இதோ!
சென்னை: நடிகர் சரத்குமார் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த வயதிலும் செம கின்னுன்னு ஆஜானுபாகுவாக வலம் வருவதால் தான் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரமே அவருக்கு வழங்கப்பட்டது.
போர் தொழில் படத்தில் 69 வயதிலும் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக காட்சியளித்து ரசிகர்களை மிரள வைத்துள்ள சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் படு பிசியாக நடித்தும் வருகிறார்.
நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் பேப்பர் போடும் சிறுவனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், சிறிய ரோல்களிலும், வில்லனாகவும் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து சுப்ரீம் ஸ்டாராக மாறிய நிலையில், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்து இங்கே காணலாம் வாங்க..

சரத்குமாருக்கு 69 வயசு: நடிகர் சரத்குமார் 69 ஆண்டுகளை நிறைவு செய்து தனது 70வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1954ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி ராமநாதன் மற்றும் புஷ்பலீலா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார். டெல்லியில் சரத்குமாரின் அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி வந்த நிலையில், டெல்லியில் வேலைக்கு சேர்ந்த போது சரத்குமார் பிறந்தார். பின்னர் சென்னைக்கு அவர்களது குடும்பம் இடமாற்றம் செய்து வந்த நிலையில், சரத்குமார் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
இன்று தனது 69வது பிறந்தநாளை நடிகர் சரத்குமார் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். நடிகர் சரத்குமாருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேப்பர் பாய் வேலை: பட்டப்படிப்பை முடித்து விட்டு பாடி பில்டிங்கில் ஆர்வம் காட்டிய நடிகர் சரத்குமார் 1974ம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றார். அதன் பின்னர் பெங்களூருவுக்கு சென்ற சரத்குமார் அங்கே சிறிது காலம் சரியான வேலை கிடைக்காத நிலையில், பத்திரிகை ஒன்றில் பேப்பர் பாயாகவும் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கேயே வேலை பார்த்துக் கொண்டே ரிப்போர்ட்டராக மாறிய சரத்குமார் அதன் பின்னர் சென்னைக்கு வந்து ஒரு டிராவல் ஏஜென்சியையும் நடத்தினார்.
சரத்குமாரின் நண்பர் ஒருவர் தான் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் அவரை நடிக்க அழைத்த காரணத்தினால் 1986ம் ஆண்டு சமஜம்லோ ஸ்த்ரீ எனும் படத்தில் அறிமுகமானார்.
சுப்ரீம் ஸ்டார்: கண் சிமிட்டும் நேரம் என்கிற படத்தை தமிழில் 1988ல் தயாரித்து நடித்த சரத்குமார் அதன் பின்னர் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து சுப்ரீம் ஸ்டார் என்கிற நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். வரிசையாக பல படங்களில் நடித்தாலும் 1992ம் ஆண்டு வெளியான சூரியன் படம் தான் சரத்குமாருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியது.
அதன் பின்னர், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து முன்னணி ஹீரோவாக மாறினார். 1984ம் ஆண்டு சாயா என்பவரை மணந்து கொண்ட சரத்குமார் 2000ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு, 2001ல் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.

சரத்குமாரின் சொத்து மதிப்பு: கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்த சரத்குமார் தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் அப்பாவாகவும் கஸ்டடி, ருத்ரன் படங்களில் வில்லனாகவும் போர் தொழில் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து இன்னொரு ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார்.
சமீப காலமாக நடிகர் சரத்குமார் நடிக்கும் படங்களுக்கு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிகர் சரத்குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 159 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மூத்த மனைவிக்கு பிறந்த மகளான வரலக்ஷ்மி சரத்குமாரும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











