மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் படம்.. கதை என்ன தெரியுமா?.. இந்த முறையும் அது மாதிரியா?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அவரது 50ஆவது படமான ராயன் படுதோல்வியை சந்தித்தது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்தப் படங்களுக்கு பிறகு ஏகப்பட்ட படங்களை அவர் வைத்திருக்கிறார். அதில் ஒன்றுதான் மாரி செல்வராஜுடன் இணையும் படம். இந்தச் சூழலில் அந்தப் படத்தின் கதை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, தயாரிப்பு என பல ஜானர்களில் தன்னை நிரூபித்திருக்கிறார் அவர். முதலில் பவர் பாண்டி படத்தை இயக்கிய அவர் அடுத்ததாக ராயன் படத்தை இயக்கினார். அப்படம் அவரது 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானாலும் ராயன் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் அப்படம் சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை: ராயன் படத்துக்கு பிறகு சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். குபேராவை முடித்திருக்கும் அவர்; இட்லி கடை படத்தை இயக்கி நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். அருண் விஜய்யும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக இட்லி கடை ரிலீஸாகவிருக்கிறது.
வரிசையாக படங்கள்: தமிழ் சினிமாவில் தற்போதைக்கு ஒரு ஹீரோவிடம் அதிக படங்கள் இருப்பது என்றால் தனுஷிடம்தான். இட்லி கடை படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்தப் படம் தவிர்த்து இளையராஜாவின் பயோபிக், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியாக இருக்கிறார்.
மாரி செல்வராஜுடன் மீண்டும்: தனுஷின் லைன் அப்புகளில் மாரி செல்வராஜுடன் அவர் இணையவிருக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே கர்ணன் படத்தை கொடுத்தார்கள். அந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் இவர்கள் இணையவிருக்கும் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன கதை: அதாவது அவர்கள் சேரவிருக்கும் படத்தின் கதை குறித்து பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதன்படி 1970களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகவிருக்கிறதாம். எந்த சம்பவம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே மாரி செல்வராஜ் தற்போது விக்ரமின் மகனான துருவ்வை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இது கபடியை மையமாக வைத்து உருவாகிவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு தனுஷ் பட பணிகளை அவர் தொடங்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











