கடன் பிரச்னை.. கழிவறை சுத்தம் செய்தது முதல் டாக்சி டிரைவர் வரை.. அப்பாஸ் உருக்கம்
சென்னை: நடிகர் அப்பாஸ் 90களில் சினிமாவுக்குள் வந்து 2000களின் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். முக்கியமாக பெண் ரசிகைகளை அதிகம் கொண்டிருந்த அவர் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பட வாய்ப்புகள் குறைந்துபோக ஆள் காணாமல் போனார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் அப்பாஸ். மிர்சா அப்பாஸ் அலி என்ற இயற்பெயர் கொண்ட அவர் நடிகர் ஃபெரோஸ் கானுக்கு ஒருவகையில் சொந்தம் ஆவார். சினிமாவின் ரத்தம் அப்பாஸுக்குள் ஓடியதாலோ என்னவோ அவருக்கு மாடலிங் மேல் ஆசை வந்தது. அதன்படி 1994ஆம் ஆண்டு Face of Bangalore என்ற டைட்டிலை தட்டி சென்றார் அப்பாஸ். அதனையடுத்து அவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்தது. முதன்முதலாக தமிழில் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார்.

முதல் படமே செம பெயர்: 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மெகா ஹிட்டானது. ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் காதலிப்பது என்ற ஒன்லைனை வைத்து கதிர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அதில் அப்பாஸின் அழகும், நடிப்பும் யார் இவர் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான என்னை காணவில்லையே பாடலிலும், முஸ்தஃபா முஸ்தஃபா பாடலிலும் வினித்தை விடவும் அப்பாஸ் அதிகம் ஸ்கோர் செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
தொடர் வாய்ப்புகள்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அப்பாஸுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. விஐபி, பூச்சூடச்வா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்பாஸின் அழகும், நடிப்பும் தொடர்ந்து கவனம் ஈர்த்துக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தினார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: அந்தப் படத்தில் அப்பாஸின் வேடமும் கவனம் ஈர்த்ததன் காரணமாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஐஸ்வர்யா ராயை காதலித்து சூழ்நிலை காரணமாக அந்தக் காதலை பிரியும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். பிறகு கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். முக்கியமாக மின்னலே படத்தில் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி அசால்ட்டாக அப்ளாஸை அள்ளியிருந்தார்.
காணாமல் போன அப்பாஸ்: இப்படி முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியமான ரோல்களை ஏற்றுவந்த அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். மேலும் பெண் ரசிகைகளையும் ஏராளமாக கொண்டிருந்தார் அவர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கடைசியாக 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படத்தில் நடித்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், 'சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும்போது சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் வாய்ப்புகளும் குறைந்தன. அப்போது குடும்பத்திற்கு உதவுவதற்காக பைக் மெகானிக்காக வேலை செய்தேன். கழிவறை சுத்தம் செய்தேன். அதுமட்டுமின்றி நியூசிலாந்தில் டாக்சி டிரைவராகவும் பணியாற்றினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











