ரஜினிகாந்த் - வெங்கட் பிரபு இணையும் படம்?.. இந்த ஜானரில்தான் உருவாகிறதா?.. வெளியான தகவல்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கொள்ளை லாபம் என்றே சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருக்கும் சூழலில்; ரஜினிகாந்த்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக சமீபமாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே அந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒருசில படங்களே தோல்வியடைந்திருக்கின்றன. முக்கியமாக தான் இயக்கும் படங்களில் பக்காவான ட்விஸ்ட், ஜாலியான சீன்கள் என முழு கமர்ஷியல் பேக்கேஜை வைத்துவிடுவார். ஆனால் அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் அதற்கு முன்னதாக அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

GOAT வெங்கட் பிரபு: கஸ்டடி தோல்விக்கு பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருந்தார் வெங்கட். ஏஜிஎஸ் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகியிருந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெங்கட் பிரபு உழைத்திருந்தார். கண்டிப்பாக கஸ்டடி சந்தித்த விமர்சனத்துக்கு இதில் மருந்திட்டு கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் வெங்கட்.
சுமாரான வரவேற்பு: கடந்த செப்டம்பர் மாதம் படம் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். அதேசமயம் அடுத்தடுத்த நாட்களில் படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் படத்தில் ஏகப்பட்ட குறைகளை கூறி தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். இதன் காரணமாக படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
வசூல் ரீதியாக ஹிட்?: விமர்சன ரீதியாக படம் பலத்த அடி வாங்கியது. முக்கியமாக வெங்கட் பிரபு சொதப்பிவிட்டார்; அரத பழசான கதையை பட்டி டிங்கரிங் செய்து கொடுத்திருக்கிறார் என்ற பேச்சுக்கள் ஓபனாகவே கேட்க ஆரம்பித்தின. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவருகிறது. மொத்தம் 500 ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன.
அடுத்த படம்: GOAT படத்தின் கலவையான விமர்சனத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவும், ரஜினியும் இணையவிருப்பதாக கூறப்படும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, மங்காத்தா, GOAT ஆகிய படங்களின் ஹீரோக்களான அஜித், விஜய் ஆகியோரை நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்தது போல் ரஜினிகாந்த்தையும் நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











