எந்த சாதிக்காரனும் வேணாம்... இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க!- இது லிங்கா பஞ்ச்
ரஜினி படம் என்றால் பஞ்ச் வசனங்கள் இல்லாமலா... ஆரம்பத்தில் லிங்கா படத்தில் பஞ்ச் மற்றும் அரசியல் வசனங்கள் வேண்டாம் என்று முடிவு செய்திருந்த ரஜினி, இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.
லிங்காவில் இளைஞனாக வரும் ரஜினி பேசுவதா வரும் பஞ்ச் வசனம் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர்..
தமிழ் சினிமாவில் அமரர் எம்ஜிஆர் காலத்திருந்தே பஞ்ச் எனப்படும் முத்திரை வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் எம்ஜிஆர் பேசிய வசனங்களுக்கு பின்னணியில் ஸ்பெஷல் சத்தமெல்லாம் கொடுக்கவில்லை. இன்னொன்று அவரது ஒவ்வொரு வசனமுமே முத்திரைதான். நாடோடி மன்னன் வசனங்களை விடவா...

ரஜினி தொடங்கி வைத்தது..
அவருக்குப் பின் ரஜினியின் படங்களில் அவர் ஸ்டைலாகப் பேசும் ஒவ்வொரு வசனமும் முத்திரைப் பதித்தன. பதினாறு வயதினிலேயில் இதெப்டி இருக்கு... தொடங்கி, பாட்ஷாவில் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, முத்துவில் 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது', அருணாச்சலத்தில் 'ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்', படையப்பாவில் 'என்வழி தனி வழி', சிவாஜியில், 'ச்சும்மா அதிருதுல்ல...' - இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சிறப்பு வசனம் இடம்பெறுவது வழக்கமானது.

எந்திரனில் இல்லை
எந்திரன் படத்தில் மட்டும் அதிரடி பஞ்ச் வசனங்கள் ஏதும் இல்லை. வழக்கமான ரஜினி பாணி படமும் இல்லை அது. ஆனால் அடுத்து வந்த கோச்சடையானில் அனைத்து வசனங்களுமே முத்திரை வசனங்களாக அமைந்தன.

லிங்காவில்..
லிங்கா படத்தை ஆரம்பித்த போது, இந்தப் படத்தில் அரசியல் வசனங்களோ, முத்திரை வசனங்களோ இல்லாமல் இயல்பாக எடுக்கலாம் என்று முடிவு செய்தனர். கேஎஸ் ரவிக்குமாரும் அப்படித்தான் சொல்லியிருந்தார். ஆனால் அதில் மாறுதல். படம் முழுக்க அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம் பெறுகின்றனவாம்.

சாதிக்காரன் வேணாம்
இப்படத்தில் இரு வேடங்களில் வருகிறார். இதில் ஒரு ரஜினி மக்களுக்காக அணை ஒன்றை கட்ட பாடுபடும் பாத்திரத்தில் வருகிறார். அவர் பேசும் ஒரு பஞ்ச் வசனம் இது.. ‘எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க' .


Click it and Unblock the Notifications











