Vijayakanth - மகனின் திருமணத்தை பார்க்காமலேயே செல்லும் விஜயகாந்த்.. திருமணம் நடக்காமல் இருக்க இதுதான் காரணமா?
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியிருக்கிறது. இறுதிச்சடங்கு இன்று மாலை 4.45 மணிக்கு அக்கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதில் விஜயகாந்த் குடும்பத்தினர் உட்பட 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்துக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். இதற்கிடையே அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்திருந்தார். முழு ஓய்வில் இருந்ததால் அவ்வப்போது அவர் தொண்டர்களை சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார். நிலைமை இப்படி இருக்க மீண்டும் அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மீண்டும் மீண்டும் மருத்துவமனையில்: அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளித்ததால் வீடு திரும்பினார். இதனையடுத்து தேமுதிக பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டார். ஆனால் திடீரென நேற்று முன் தினம் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது.
உயிரிழப்பு: ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சோகமடைந்துள்ளனர். முதலில் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முடிவடைகிறது.

மாலை இறுதிச்சடங்கு: அங்கு இன்று மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தின் வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதில் விஜயகாந்த் குடும்பத்தினர் உட்பட 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வலகத்தில் அலைகடலென மக்கள் திரண்டிருக்கின்றனர்.
விஜயகாந்த் மகனுக்கு நோ திருமணம்: இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. அவருக்கு கீர்த்தனா என்பவருக்கும்தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. திருமணம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் அந்தத் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இது ஒருபக்கம் இருந்தாலும் மோடியின் தலைமையில் தனது மகனின் திருமணத்தை நடத்த விஜயகாந்த் விரும்பியதாகவும் ஆனால் அதற்கான தேதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதாலும்; அவரை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை இருந்ததாலும்தான் விஜயபிரபாகரன் தனது திருமணத்தை தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார் என்று தெரிகிறது. தனது மகனின் திருமணத்தை பார்க்காமலேயே விஜயகாந்த் செல்வது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











