Rajini - என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க ரஜினி.. சூப்பர் ஸ்டாரிடம் உலக நாயகன் இப்படியும் சொல்லிருக்காரா?
சென்னை: ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். அவர்கள் இரண்டு பேருக்குமே செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கமல் ஹாசனும், ரஜினிகாந்த்தும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர்.

கூட்டணி அமைத்த ரஜினி, கமல்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். கமல் ஹாசன் மீது எப்போதும் தீராத நட்பு கொண்ட ரஜினிகாந்த்தும் அதை ஆமோதித்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். கம்ர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை என நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் அவர் தனது திறமையையும் நிரூபித்தவர்.
உலக நாயகன் கமல் ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.
ரஜினிகாந்த்தின் முடிவு: கமல் ஹாசன் எப்போதும் தனது மூச்சாக சினிமாவை நினைப்பவர் என்று பலரும் கூறுவார்கள். அதேசமயம் ரஜினிகாந்த்தோ நடிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவுக்குள் வந்தவர். ஒருகட்டத்தில் அவர் வளர்ந்த பிறகு திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் அவரது நலம் விரும்பிகள் அறிவுறுத்தலின்பேரில் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடலாம் என்று ரஜினிகாந்த் எடுத்த முடிவு அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் கமலின் பேச்சு: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து கமல் ஹாசன் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு மேடையில் பேசிய கமல் ஹாசன், "இந்த ஆளு (ரஜினிகாந்த்) ஒருநாள் என்னிடம் வந்து சினிமாவை விட்டு போய்விடலாம் என்று இருப்பதாக சொன்னார். நான் உடனே பதறிப்போய் நீங்கள் சினிமாவை விட்டு போனீங்கனா என்னையும் போக சொல்லுவாங்க. என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க ரஜினி சொல்லிவிட்டேன்" என்றார்.
அடுத்தடுத்த படங்கள்: ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கமல் ஹாசன் 233 படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படமும் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











