Sivakarthikeyan - நடிச்சா ஹீரோதான் இல்லைனா வேண்டாம்.. சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்டாரா நண்பர்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக ஜொலித்தவர் சிவகார்த்திகேயன். இவரது லுக்கையும், டைமிங்கையும் பார்த்த தனுஷ் தனது 3 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.

சிறுவர், சிறுமிகளை கவர்ந்த சிவா: தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக சிறுவர்களையும், சிறுமிகளையும் கவர்ந்த ஹீரோவாக வளர்ந்தார் சிவா. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் தற்போது தெளிவாக பயணம் செய்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்து சிவகார்த்திகேயனை டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது.
அடிவாங்கிய பிரின்ஸ்: இரண்டு படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்த உற்சாகத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற நோக்கத்தில் நடித்த பிரின்ஸ் படம் பெரும் தோல்வி அடைந்தது. அவரது கரியரில் சீமராஜா என்ற மிகப்பெரிய தோல்வி படத்துக்கு பிறகு பிரின்ஸ் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியோடு மட்டுமின்றி ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
அயலான்: அதனையடுத்து அவர் நடித்த மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது இதன் காரணமாக பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிட்டதாக எஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூற ஆரம்பித்தனர். இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்தார் சிவகார்த்திகேயன். ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் பெரும் தாமதத்துக்கு பிறகு கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது.
நண்பர் ராஜா: இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனின் கரியரில் ரொம்பவே முக்கியமானவர் ஆர்.டி.ராஜா. இருவரும் விஜய் டிவியிலிருந்தே பழக்கம் என கூறப்படுகிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் இரண்டு பேரும் சேர்ந்து படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.
ஒருமுறை சந்தானத்துக்கு நண்பராக நடிக்க சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வந்ததாம். சினிமா வாய்ப்புதானே என்று சொல்லி சிவாவும் ஒத்துக்கொண்டாராம். ஆனால் இதனை கேள்விப்பட்ட ராஜா, வேண்டாம் நீ நடிச்சா ஹீரோவாக மட்டும் நடி. சந்தானத்துக்கு நண்பர் வேடம் என்று சொல்லி போனால் அடுத்தடுத்து உனக்கு அதே மாதிரியான வேடங்கள் தான் வரும் என கூறினாராம்.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் மனம் மாறியதாக கூறப்படுகிறது. இப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்த இரண்டும் பேரும் ஏதோ காரணங்களால் இப்போது பிரிந்துவிட்டனர் என்ற பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











