வரிசையாக பீரியட் கால படத்தில் நடிக்கும் சூர்யா இதோ முழு லிஸ்ட்.. செம லைன் அப்பா இருக்கே
சென்னை: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா படத்தை இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிரார். அடுத்ததாக அவர் சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்கராவுடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா வரிசையாக நடிக்கும் பீரியட் படம் பற்றி தெரியவந்திருக்கிறது.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் விஜய்யுடன் தோன்றிய சூர்யாவை பலரும் விமர்சிக்கவே செய்தனர். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை என பலர் நேரடியாகவே கூறினர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.

மாற்றம் தந்த நந்தா: நேருக்கு நேர் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த சூர்யாவுக்கு நந்தா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. பாலா இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க படமும் மெகா ஹிட்டானது. அந்த இரண்டு படங்களும்தான் சூர்யாவுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தன.
முன்னணி ஹீரோ: அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்கவும் செய்தன. இப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தன. பல படங்கள் அவரது பெயர் சொன்னாலும் சிங்கம் படம்தான் அவரை கொண்டுபோய் கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தில் நிறுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானது.
கங்குவா: தற்போது அவர் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இதில் சூர்யாவுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
பத்து மொழிகளில்: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருப்பது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பது; இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
அடுத்த படங்கள்: படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவிருக்கும் பீரியட் படங்கள் பற்றிய லிஸ்ட் தெரியவந்திருக்கிறது. அதன்படி ஹிந்தியில் எண்ட்ரி கொடுக்கவிருக்கும் சூர்யா ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதில் சூர்யா கர்ணன் கதாபாத்திரம் ஏற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா 43, வாடிவாசல்: அதேபோல் சூரரைப் போற்று என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவிருக்கும் புறநானூறு படமும் பீரியட் படம்தான். 90களின் முற்பகுதியில் நடப்பது போன்று இப்படம் அமைந்திருக்கும். மேலும் வெற்றிமாறனுடன் சூர்யா முதல்முறை இணைந்திருக்கும் வாடிவாசல் படமும் பீரியட் படம்தான் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











