எதிர்காலத்தில் கோபப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுவதாகச் சொல்லமாட்டேன்- கமல்
சென்னை: இனி கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவதாகச் சொல்ல மாட்டேன் என்று கமல் ஹாஸன் கூறினார்.
நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருது நேற்று டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.
இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு நேற்றிரவு சென்னை திரும்பிய கமல் ஹாசன் செய்தியாளர்களுக்குப்பேட்டி அளித்தார்.

விஸ்வரூபம் பிரச்சினையின் போது
கடந்த ஆண்டு 'விஸ்வரூபம்' படம் தொடர்பான சர்ச்சை எழுந்து, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட போது பேட்டியளித்த கமல் ஹாசன், 'உலக நாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல் போனால் மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்வேன். என்னை எங்கு குடியமர்த்துவது என்பது என் ரசிகர்களுக்கு தெரியும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பெருமிதம்
இன்று பத்மபூஷன் விருது பெற்றபோது, சுற்றிலும் ஜாம்பவான்கள் நிற்க, தனக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், 'என்னைச் சுற்றிலும் இருந்த சிறப்புக்குரியவர்களுடன் இணைந்து நானும் ஒருவனாக இந்த விருதைப் பெற்றமைக்காக பெருமிதம் அடைந்தேன்.

என் கடமை
அவர்களின் திறமை மற்றும் சாதனைகளை நினைத்து பூரிப்படைந்தேன். இந்தியனாக இருப்பதில் பெருமைக் கொண்டு, இந்த நாட்டுக்கு நான் ஆற்றவேண்டிய கடமையை எண்ணி, மீண்டும் ஒருமுறை அதற்காக சூளுரைத்தேன்.

கோபப்பட மாட்டேன்
எதிர்காலத்தில், கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுப்பதில்லை என்று உறுதியாக தீர்மானித்தேன்,' என்று உணர்ச்சிவசப்பட்டார். இந்த விருது குறித்து தனியாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











