நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டேன்...: விஷால் உறுதி
காளஹஸ்தி: தனக்கு தற்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை எனவும், எனவே அரசியலில் யாருக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கப் போவதில்லை எனவும் உறுதி படத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் விஷாலின் நடிப்பில் 'நான் சிகப்பு மனிதன்' திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இவரது ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் பாண்டியநாடு படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடிகர் விஷால் தனது தாயாருடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அங்கு அவருக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முதலில் அவர், கோவில் உள்ளே ராகு-கேது பரிகார பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் சாமி படம், பிரசாதங்களை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் விஷால் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது :-

இந்திரடு...
தமிழில் நடித்து விரைவில் வெளிவர உள்ள இந்திரன் என்ற திரைப்படத்தை, தெலுங்கில் இந்திரடு என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட உள்ளேன்.

நல்ல கதை அமைந்தால்...
தெலுங்கில் நல்ல இயக்குனர்கள், நல்ல திரைக்கதைகள் கிடைத்தால் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பேன்.

அரசியல் ஆர்வம் இல்லை...
எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நான் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன்.

என் ஓட்டு சிறப்பான வேட்பாளருக்கே....
நான் வசிக்கும் சென்னை தொகுதியில் சிறப்பான வேட்பாளருக்கு ஓட்டு போடுவேன்' என இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

அதெல்லாம் ‘சிதம்பர’ ரகசியம்....
அரசியலைத் தொடர்ந்து ‘உங்களுக்கு திருமணம் எப்போது? என சொந்த வாழ்க்கை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘என்னை வம்பில் இழுத்து விடாதீர்கள்' என சிரித்துக் கொண்டே நழுவிச் சென்றார் விஷால்.

அலைமோதிய ரசிகர்கள்...
நடிகர் விஷாலை பார்க்கும் ஆவலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











