ஹிப்ஹாப் ஆதி அடுத்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
சென்னை : தனித்துவமான ஹிப்ஹாப் இசையை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த ஹிப்ஹாப் ஆதி இப்பொழுது நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.
கமர்சியல் ரீதியாக இவரது திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வர சமீபத்தில் வெளியான சிவக்குமாரின் சபதம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.
இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

தனித்துவமான பாடல்கள்
துள்ளலான ஹிப்ஹாப் இசையின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இண்டிபெண்டன்ட் ஆல்பம் பாடல்கள் உருவாக்கியதன் மூலம் பிரபலமான இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வழக்கமான ஃபார்முலாவாக இல்லாமல் தன்னுடைய இசையில் தனித்துவமான பாடல்களை இசையமைத்து அதிலும் வெற்றி கண்டார்.

ஹீரோவாக தமிழ் சினிமாவில்
தமிழைத் தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பல படங்களுக்கு இசை அமைத்தவர் அங்கும் இவரது பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இசை அமைப்பாளராக இருந்து ஹீரோவாக மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய சொந்த வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இயக்கி நடித்திருந்த மீசையமுறுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆதி ஹீரோவாக தமிழ் சினிமாவில் பயணம் செய்து கொண்டுள்ளார்.

சிவகுமாரின் சபதம்
இசையமைப்பதை குறைத்துக்கொண்டு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தும் ஹிப்ஹாப் ஆதி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் மீசைய முறுக்கு படத்தைத் தொடர்ந்து இயக்கி நடித்திருந்த சிவகுமாரின் சபதம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கலகலப்பான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்க இதில் ஆதிக்கு ஜோடியாக அறிமுக நாயகி மாதுரி நடித்துள்ளார்.

இரட்டை வேடத்தில்
சிவகுமாரின் சபதம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் அன்பறிவு படத்தின் படப்பிடிப்பும் இப்பொழுது நிறைவு பெற்றுள்ளது. இதில் நெப்போலியன், விதார்த்,ஊர்வசி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி மூன்றாவது முறையாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மரகத நாணயம் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்க பேண்டசி திரைப்படமாக உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் 6-வது படமாகும்.


Click it and Unblock the Notifications











