சாக்லேட் பாய்ன்னு சொன்னாலே எரிச்சலா வருது.. காரணத்தை சொல்லி கடுப்பான சித்தார்த்!
சென்னை: பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகர் சித்தார்த். தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களை பெற்றார்.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஜெனிலியா, பரத், நகுல் போன்ற பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான்.
பாய்ஸ் படத்தில் இருந்தே நடிகர் சித்தார்த்தை பலரும் சாக்லேட் பாய் என்று அழைக்க தொடங்கினர். ஆனால் தனக்கு சாக்லேட் பாய் என்று கூப்பிட்டாலே எரிச்சலாக இருக்கிறது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

பாய்ஸ் நல்ல அறிமுகம்
2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படிக்கும் வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் .வாழ்க்கையில் ஜெயிக்க எப்படி பாடுபடுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் மைய கதை. கல்லூரி மாணவ மாணவர்களுக்கு இந்த படங்கள் மிகவும் பிடித்திருந்தாலும், ஃபேமிலி ஆடியன்சிடத்தில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பாய்ஸ் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். ஆயுத எழுத்து படத்தில் சூர்யா, மாதவன், இஷா தியோல், மீரா ஜாஸ்மின், த்ரிஷா போன்ற பலரும் நடித்திருந்தனர். சித்தார்த்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் கவனம்
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சித்தார்த். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தமிழில் என்ட்ரி கொடுத்தார். அப்போது இவர் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் நடிகர் சித்தார்த். காவியத்தலைவன் திரைப்படத்தின் சித்தார்த்துடன் இணைந்து பிரித்விராஜ், வேதிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

பன்முக திறமை
அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. சித்தார்த் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும், பல படங்களுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார். தி லயன் கிங் படத்தில் சிம்பா சிங்கத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் சித்தார்த். பலமுறை சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இப்போது தன்னை சாக்லேட் பாய் என்று கூப்பிட்டால் தனக்கு பிடிக்காது என்றும் அப்படி கூப்பிட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.

எரிச்சலா வருது
தன்னை சாக்லேட் பாய் என்று ரசிகர்கள் கூப்பிடுவது குறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில் நானும் 17 வருஷமா மாங்கு மாங்குன்னு நடிக்கிறேன்.ஆனால் என்ன பாக்கும்போது சாக்லேட் பாய் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். எனக்கு அப்படி கூப்பிட்டாலே எரிச்சலாக தான் வருகிறது. என்ன பொறுத்தவரை சாக்லேட் பாய் என்பது ஒரு தப்பான வார்த்தை. ஒரு நடிகரை பார்க்கும்போது அவர்களிடத்தில் இருக்கும் திறமையை குறிப்பிட வேண்டுமே தவிர சாக்லேட் பாய் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சாக்லேட் பாய் பட்டத்தை உடைக்க பல வருடங்களாக போராடி வருவதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். கண்டிப்பாக அந்த பட்டத்தை நான் உடைத்தெறிவேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











