twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலன் தோல்விக்கு நான் பொறுப்பல்ல-ரஜினி

    By Staff
    |

    Rajini fans meet
    குசேலன் படத்தில் நடிக்க நான் ரூ.25 கோடி வாங்கவில்லை. அந்தப் படத்தின் தோல்விக்கும் நான் பொறுப்பல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    நேற்று ரசிகர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களின் அடுத்த பகுதி:

    கேள்வி: குசேலன் படத்தின் தோல்வி பற்றி உங்கள் கருத்து என்ன, அந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிப்பதற்கு, ரூ.25 கோடி சம்பளம் வாங்கியது உண்மையா? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் சொல்லலாம்...!

    பதில்: குசேலன் படத்தின் பூஜை அன்றே நான் சொன்னேன். இந்த படத்தில் 25 சதவீதம்தான் என்னுடைய பங்கு என்று. அதன்பிறகு டைரக்டர் வாசு எனக்கு நிறைய சீன்கள் வைத்தார். கெளரவ வேடம் என்று சொன்னேனே...இத்தனை சீன்கள் வைக்கிறீர்களே என்று கேட்டேன். சமாதானப்படுத்தினார்கள். கெளவுரவ வேடம் என்று வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

    அடுத்து, அந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்க முடிவு செய்யப்பட்டது. பிறகு தெலுங்கிலும் எடுக்க முடிவு செய்தார்கள். அந்த படத்தின் மலையாள உரிமையை கேட்டபோது, அதை ஏற்கனவே தயாரித்தவர், என்னையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொண்டால்தான் 'ரைட்ஸ்' தருவேன் என்றார்.

    ரூ.60 கோடிக்கு விற்க எதிர்ப்பு:

    படம் 60 கோடி, 65 கோடி என்று விலை பேசப்பட்டது. அது வேண்டாம் என்று சொன்னேன். நாமினலான தொகைக்கு விற்று, குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணச் சொன்னேன். கேட்கவில்லை. இதுல என் தப்பு என்ன இருக்கு?

    நான் தப்பு செய்தால், நானே ஒத்துக்கொள்வேன். நான் தப்பு செய்யவில்லை. அந்த படத்துக்காக எனக்கு கொடுக்கப்பட்டது, 25 கோடி அல்ல. நிச்சயமாக 25 கோடி அல்ல.

    தோல்வி பற்றிக் கேட்டீர்கள். ஒரு படத்துக்கு மறுபடியும் மறுபடியும் ரசிகர்கள் வந்தால்தான் அது வெற்றி பெறும். அந்த படத்துக்கு அவ்வளவுதான் தலைவிதி.

    கேள்வி: தொடர்ந்து நடிப்பீர்களா?

    பதில்: பணத்துக்காகவும், புகழுக்காகவும் தொடர்ந்து நடிக்க மாட்டேன். கடவுள் அருளால் போதுமான பணமும், புகழும் இருக்கிறது. நல்ல வேடங்கள்... இவரால்தான் நடிக்க முடியும்... என்று பேசப்படுகிற வேடங்களில், தமிழ் மக்களை பெருமைப்படுத்துகிற படங்களில் மட்டும் இனி நடிப்பேன்.

    கேள்வி: பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பீர்களா?

    பதில்: நான் ஏன் பிறந்தேன்? என்று யோசிப்பதற்கு அந்த நாளை பயன்படுத்திக் கொள்கிறேன். அன்று என் குடும்பத்தினர் கூட, என்னை தொந்தரவு செய்வதில்லை.

    கேள்வி: சமுதாயத்துக்கு நற்பணிகளும், தொண்டும் செய்வது திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டதே?

    பதில்: முன்பு இலவச திருமணங்களை நடத்தி வந்தேன். 30 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை, வேறு மாதிரி செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அது வெளியில் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    ரசிகர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

    பதில்: நான் நடிகன். ஆரம்பத்தில் அர்த்தம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். நீங்கள்தான் கமர்ஷியல் படங்களில் நடிக்கச் சொன்னீர்கள். பிறகு சண்டை, டான்ஸ், காமெடி கேட்டீர்கள், அதையும் தந்தேன். இப்போது நல்ல படங்கள் கேட்கிறீர்கள். தருகிறேன். ஒரு ரசிகனுக்கு, நல்ல நடிகனா என் கடமையை செய்றேன்.

    ஆசியாவிலேயே யாருக்கும் கிடைக்காத அளவு செல்வாக்கு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதை வீணாக்கலாமா?

    பதில்: நிச்சயமா வீணாக்க மாட்டேன். கண்டிப்பா சரியான முறையில் பயன்படுத்திக்குவேன் என்றார் ரஜினி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X