ஷாரூக்கான் மீது மரியாதை உண்டு.. ஆனால் நண்பனாகத் தொடர முடியாது!- சல்மான்
மும்பை: நடிகர் ஷாரூக்கான் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் எங்களால் நண்பர்களாகத் தொடர முடியவில்லை, என நடிகர் சல்மான்கான் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பாலிவுட்டில் அதிக அளவு சர்ச்சைக்குள்ளானவர்கள் ஷாரூக்கானும் சல்மான்கானும்தான். இத்தனைக்கும் இருவரும் கரண் அர்ஜூன், குச் குச் ஹோதா ஹை என நான்கைந்து பெரிய ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

தகராறுகள்
ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் ஆகியோருடன் சல்மான் கான் நெருக்கமாகப் பழகிய காலங்களில் ஷாரூக்குக்கும் சல்மானுக்கும் கை கலப்பு நடந்ததாகக் கூட செய்திகள் வெளியாகின.
ஷாரூக் கான் - ஐஸ்வர்யா ராய் நடித்த மொகப்பதேன் படப்பிடிப்பின்போது, ஐஸ்வர்யாவின் அன்றைய காதலனான சல்மான்கான் செட்டுக்கு வந்து தகராறு செய்ததும், அவரை அப்புறப்படுத்த முயன்ற ஷாரூக்குடன் மோதியதும் நினைவிருக்கலாம்.
2008-ம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த விழாவில் கத்ரீனாவின் காதலர் சல்மான்கான் கலந்து கொண்டார். ஷாருக்கானும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்தபோது சல்மான் கானுக்கும் ஷாருகானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

காபி வித் கரண்
அன்றிலிருந்து சல்மான் கானின் முழு எதிரியாக மாறிவிட்டார் ஷாரூக்கான். ஷாருக்கானுடன் விரோதபோக்கு இருந்தும், சமீபத்தில் இப்தார் நோன்பில் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், ‘காபி வித் கரன் 4' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் சல்மான்கான்.

சலாம் அலைக்கும்
அவர் கூறுகையில், "இப்தார் நோன்பில், நான் ஷாருக்கானை கவனிக்காது சென்று இருந்தால்அது தவறாகப்போயிருக்கும். நான் அவர் உட்கார்ந்து இருப்பதை கவனித்தேன். அதனால், அவர் அருகே சென்று 'சலாம் அலைக்கும்' என்றும் கூறினேன். அவரும் பதிலுக்கு வா அலைக்கும் சலாம் என்றார்.

பழகிக் கொள்ளவில்லை
எங்களுக்கிடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. அன்றைக்கு அழகான இரவாக எங்கள் இருவருக்குமே அமைந்தது அது. ஆனால் நாங்கள் இருவரும் பழகிக் கொள்ளவில்லை. அதுதான் கொஞ்சம் என்னை பாதித்தது.
அதே நாள் இரவு அவர் என்னிடம் வந்து பேசியிருக்க முடியும். ஆனால், அவர் வர விரும்பவில்லை. ஆனால், நான் அதை விட்டுவிடு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

என்வீட்டு வழியாகத்தான்...
ஷாருக்கான் எனது வீட்டு வழியாக தினந்தோறும் நான்கு முதல் ஐந்து முறை கடந்து செல்கிறார். அவர் எனது வீட்டு காலிங் பெல்லை ஒரு முறையாவது அடித்திருக்கலாம்.

நண்பர்களாக இருக்க முடியாது
இப்தார் நோன்பு சந்திப்பிற்குபிறகு நான் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ஆனால், இரு நடிகர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது என்று வலியுறுத்தி கூறுகிறேன்.

அந்த விஷயத்தில் அவரை ஜெயிக்க முடியாது
ரொமாண்டிக் காட்சிகளில் ஷாருக்கான் மிக தத்ரூபமாக நடிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் அவரை யாரும் ஜெயிக்க முடியாது. அற்புதமான நடிகர்," என்றார்.


Click it and Unblock the Notifications











