பாரதிராஜா - இளையராஜா குடும்ப புகைப்படம்.. மனோஜ், பவதா இப்போ இல்லை.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: தேனி அல்லிநகரம், பண்ணைப்புரம் கிராமங்களில் இருந்து வந்த இரண்டு இமயங்கள் ஒன்றிணைந்து தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை பாரதிராஜாவின் மகன் மனோஜ் உயிரிழந்த சம்பவம் திரை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நீலாங்கரையில நடக்க இருக்கிறது. இதனிடையே, மனோஜின் பழைய வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் மகன் என்ற அறிமுகம் கிடைத்தாலும், தனக்கென்று தனி பாணியை உருவாக்க முயற்சித்தவர் மனோஜ். ஆனால், அவர் கனவுப்படமான சிகப்பு ரோஜாக்கள் 2 எடுக்க முயற்சித்து பிரச்னைகள் அதிகம் வந்ததாக மனோஜ் முன்னதாக அளித்த பேட்டியில் தெரிவித்தார். தனது குடும்பம் இல்லையென்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பேன் என தெரிவித்திருந்தார்.

பாரதிராஜா - இளையராஜா: இரண்டு இமயங்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெக்கத்தி பொண்ணு சீரியல் மூலம் இருவரும் ஒன்றிணைந்து பணியாற்ற தொடங்கினர். இளையராஜா - பாரதிராஜா என்ற பெயர்களுக்கு பின்னால் பிரம்மிப்பும், ஆச்சர்யமுமே நிகழ்ந்திருக்கின்றன. இவர்களது இரண்டு குடும்பத்திலும் கலை வாரிசுகள் ஏராளம். மனோஜ் நடிகராகவும், யுவன் இசையமைப்பாளராகவும், கார்த்திக் ராஜா இசையமைப்பாளர், பவதாரணி பாடகி என தங்களுக்கான அடையாளத்தை பிடித்தனர்.
இசைஞானி இளையராஜா மீது மனோஜ் பேரன்பு வைத்துள்ளார். அவர் மார்கழி திங்கள் படம் வெளியான போது இதை தெரிவித்தார். இப்படத்தை பற்றி கூறியதும் இளையராஜா எந்த கேள்வியும் கேட்கவில்லை நானே இசையமைத்து தருகிறேன் என கூறினார். தந்தை மீதான அன்பை என் படத்தில் இசையமைத்த போது தெரிந்துகொண்டேன் என தெரிவித்திருக்கிறார். ஆனால், மனோஜ் நடித்த படங்களில் இளையராஜா இசையமைக்காதது குறைதான். ஒருவேளை பாரதிராஜா - இளையராஜா காம்போவில் மனோஜ் நடித்திருந்தால் இதையும் தாண்டி பல உயரங்களை தொட்டிருப்பார் என ரசிகர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது, இளையராஜா - பாரதிராஜா தங்களது குடும்பங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பிரம்மிப்புடன் பார்த்து. இரண்டு இமயங்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். இளையராஜா தனது மகளை இழந்து வாடுவதை போல் பாரதிராஜா சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும் சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புகைப்படத்தில் இருக்கும் பவதாரணி, மனோஜ் ஆகியோர் தற்போது நம்முடன் இல்லை என்ற செய்தி தான் மனதை ரொம்ப கசிய வைக்கிறது.

பவதாரணி கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்தார் அவருக்கு வயது 47. மனோஜ் பாரதிராஜாவிற்கு 48. இருவரும் சிறுவயதிலேயே இந்த உலகை விட்டு பிரியா விடை கொடுத்துள்ளனர். தற்போது பாரதிராஜா - இளையராஜா ஆகியோர் தங்களது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கண்ணீருடன் பதிவிட்டு கண்ணீரில் வாடும் இமயங்கள் என வேதனையுடன் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











