அமரன் படம் எப்படி இருக்கு?.. இதோ முதல் விமர்சனம்.. ராணுவ வீரர்கள் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. எஸ்கே கடைசியாக நடித்த அயலான், மாவீரன் இரண்டு படங்களுமே பெரும் ஹிட்டடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தோடு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் அபாரமாக வளர்ச்சி அடைந்துவிட்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இதற்கிடையே அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

அமரன் ரிலீஸ்: படமானது அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் சிவாவின் கரியரில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அமரன் பார்த்த ராணுவ வீரர்கள்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் படத்தை ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் படக்குழு போட்டு காண்பித்ததாகவும்; அது அவர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முகுந்த் வரதராஜனோடு பணியாற்றியவர்களுக்கும் போட்டு காண்பித்ததாகவும்; அதற்கு அவர்கள் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் படத்தை மிக அருமையாக இயக்குநர் உருவாகியிருக்கிறார். சிவகார்த்திகேயனும் அபாரமாக நடித்திருக்கிறார் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
முருகதாஸுடன் கூட்டணி: அமரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸுடனும் கூட்டணி அமைத்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிவா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஆவல் இருக்கிறது.
GOAT கேமியோ: இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் இருக்கும் நட்பின் காரணமாக GOAT படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோல் செய்திருந்தார் சிவா. அதில் அவரிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா. க்ரவுண்ட்ல இருக்குற உயிர்கள் உங்களோட பொறுப்பு என்று விஜய் சொல்வதும்; அதற்கு, நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்க; அதை நீங்க பார்த்துக்கோங்க; இதை நான் பார்த்துக்குறேன் என்று சிவா சொல்வதுமாக வசனங்கள் வந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைத்துவிட்டார் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











