கோவா காதலியுடன் பிரபல இளம் ஹீரோவுக்குத் திருமணமா..? வேகமாகப் பரவும் செய்தி.. நடிகர் மவுனம்!
சென்னை: நடிகர் அதர்வா, காதல் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பிரபல முன்னாள் ஹீரோ முரளியின் மகன் அதர்வா. பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

தள்ளிப் போகாதே
பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து இரும்புக் குதிரை, சண்டி வீரன், கணிதன், ஈட்டி, இமைக்கா நொடிகள், பூமரங் உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, ஆர்.கண்ணன் இயக்கியுள்ள தள்ளிப் போகாதே, குறத்தி ஆட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சிநேகா பிரிட்டோ
நடிகர் அதர்வாவுக்கு காவ்யா என்ற சகோதரியும் ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளனர். சகோதரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. தம்பி ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகா பிரிட்டோவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கோவா காதலி
இந்நிலையில் நடிகர் அதர்வாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் கோவாவை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

தயாராகி விட்டார்
குடும்பத்தினர் சம்மதத்துக்காக காத்திருந்த நடிகர் அதர்வா அது கிடைத்து விட்டதால் திருமணத்துக்குத் தயாராகி விட்டார் என்று சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். இதுபற்றி அதிகாரபூர்வமாக அதர்வா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிப்பார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











