கமல்ஹாசனைச் சாடுவது ஒரு பேஷனோ...?
சென்னை: பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். அது கமல்ஹாசனுக்கு பொருத்தமாகி விட்டது. எப்பப் பார்த்தாலும் இவரைத்தான் அத்தனை பேரும் தாக்குகிறார்கள்... ஆனாலும் இந்த மனிதரோ, சிரித்தபடியே எல்லாவற்றையும் சமாளிக்கிறார், எதிரிகளையும் பலவீனமாக்குகிறார்.
கிட்டத்தட்ட கமல்ஹாசனைச் சாடுவது என்பது பேஷனாகி விட்டது. இவரைப் போல வேறு யாரும் இவ்வளவு கல்லடிகளையும், கண்ணடிகளையும் பட்டதில்லை என்று கூடச் சொல்லலாம்.
கமல்ஹாசனைச் சாடியவர்களை பட்டியலிட்டால் அது பெரிய லிஸ்ட்டாக நீண்டு கொண்டு போகும்.

ரோஜா கெட்ட கேட்டுக்கு
முன்பு இப்படித்தான் நடிகை ரோஜா, கமல்ஹாசனை மிகக் கடுமையாக சாடிப் பேசினார். விமர்சித்திருந்தார்... ஏன் எச்சரிக்கையே விடுத்தார். கமல்ஹாசனின் வயது, அனுபவத்துக்குப் பக்கத்தில் கூட வர முடியாத ஆபாச பேச்சுக்குப் பெயர் போன ரோஜா, படு துணிச்சலாக கமல்ஹாசனை எச்சரித்தது அப்போது அதிர வைத்தது.

ரோஜாவைக் கண்டிக்காத ராஜாக்கள்
ஆனாலும் ரோஜாவை நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளோ, மூத்த நடிகர்களோ, வேறு யாருமோ கண்டித்ததாக தெரியவில்லை. அதாவது பகிரங்கமாக யாரும் ரோஜாவைக் கண்டிக்கவில்லை. காரணம் ரோஜா மீதான பாசமோ என்னவோ தெரியவில்லை...

கிருஷ்ணசாமியின் எச்சரிக்கை...அப்பவும் ஆதரவில்லை
அதேபோல சண்டியர் படத்தின்போது டாக்டர் கிருஷ்ணசாமி கமல்ஹாசனை கடுமையாக மிரட்டிப் பார்த்தார், எச்சரித்தார், போராட்டத்தையும் அறிவித்தார். இந்த சமயத்திலும் கமலுக்கு யாரும் உதவிக்கு வரவில்லை.

விஸ்வரூபத்திலும் உதவி இல்லை
விஸ்வரூபம் பட விவகாரத்திலும் கூட ரொம்பத் தயங்கி தயங்கித்தான் ஒவ்வொருவராக உதவிக் குரல் கொடுத்தார்கள்... அதிலும் பலர் பம்மிப் பம்மித்தான் ஆதரவு கொடுத்தார்கள்.

இப்ப கே.எஸ்.ரவிக்குமார்
இந்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு என்ன வந்துச்சு என்று தெரியவில்லை. கமல்ஹாசன் என் நண்பர் கிடையாது என்று ரொம்பத்தான் எரிச்சலோடு பேசியுள்ளார்.

கமலுடன் பணியாற்றுவது கஷ்டம்தான்
கமல்ஹாசனோடு பணியாற்றுவது என்பது ரொம்பக் கஷ்டம் என்பார்கள். அதற்கு முக்கியக் காரணம், அவர் எல்லோருடைய வேலையிலும் தலையிடுவார் என்பதால்... ஆனால் உண்மை என்ன...

தலையில் சரக்கு இருந்தால்
ஒரு இயக்குநர் ஒரு விஷயத்தை 10 கோணத்தில் சிந்தித்தால், அதையே கமல்ஹாசன் 100 கோணத்தில் சிந்திப்பதால் வரும் விணை அது. கமல்ஹாசனே பல தடவை சொல்லியுள்ளார். எனது கேரக்டர், எனது படம் நன்றாக வர வேண்டும் என்றால் நான் தலையிடத்தான் செய்வேன் என்று. அப்படி அவர் முழுமையாக தலையிட்டதால்தான் தேவர் மகன் போன்ற கிளாஸ் படங்களை தமிழ் சினிமா பெற முடிந்தது.

தெரிந்துதானே இயக்குகிறார்கள்
கமல்ஹாசன் இப்படித்தான் என்று தெரிந்துதானே அவரை வைத்து இயக்குகிறார்கள். பிறகு ஏன் இயக்கி முடித்து சாப்பிட்டு செரித்து, கொட்டாவியும் விட்டு ரொம்ப நாளான பிறகு புலம்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ரவிக்குமார் மட்டும் தசாவதாரத்தை இயக்கியிருந்தால்...?
ஒரு வாதத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் சுயமாக, யாருடைய தலையீடும் இல்லாமல் தசாவதாரம் படத்தை இயக்கியிருந்தால் அப்படம் என்னாகியிருக்கும்... கற்பனை செய்யவே பயமாக இருக்கிறதல்லவா...

வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் இகழ்ச்சியா?
மன்மதன் அம்பு படம் கமல் கதை, தோற்றதற்கு நான் பொறுப்பில்லை என்று பேசினார் ரவிக்குமார். தசாவதாரம் படத்தின் கதையும் கூட கமலுடையதுதான். அதுகுறித்து ரவிக்குமார் வாயே திறக்கவில்லையே... ஏனோ...

இப்படித்தான் கலைப்புலி தாணுவும்
இப்படித்தான் முன்பு கலைப்புலி தாணுவும் ஆளவந்தான் படத்தின் தோல்வியால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பித் தள்ளினார். அய்யய்யோ போச்சே போச்சே என்று. ஆனால் ஆளவந்தான் படம் எத்தனையோ விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. ஏன், ஹாலிவுட்டில் கூட ஒரு படத்தில், இந்தப் படத்தின் காமிக் காட்சியைப் பார்த்து வைத்தார்கள் என்று அதன் இயக்குநரே சமீபத்தில் சொன்னார்.

நண்பர் இல்லை என்றால் பிறகு எதிரியா...
இத்தனை காலமாக கமல்ஹாசனுடன் சேர்ந்து தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம்,தசாவதாரம் என ஹிட் படங்களைக் கொடுத்து விட்டு, அவையெவல்லாம் சிறப்பாக ஓடியபோது கூடவே சந்தோஷமும் பட்டுவிட்டு இப்போது கமல்ஹாசன் என் நண்பர் இல்லை என்று பேசுகிறார் ரவிக்குமார்.. அப்படியானால் இனிமேல் கமல்ஹாசன் அவருக்கு எதிரியா என்ன...?

முடிஞ்சா...!
கமல்ஹாசன் இப்படித்தான். அவரை ஹேண்டில் செய்வது கடினம், அந்த அளவுக்கு ஜீனியஸ், எல்லையில்லாத சிந்தனையாளர், வேலை தெரிந்தவர், வித்தை தெரிந்தவர் என்று அவரது குருநாதரே கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தோன்றினால் மட்டுமே யாருமே அவருடன் பணியாற்ற முன்வர வேண்டும்.அதுதான் ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.

சினிமாவுக்காக மட்டுமே
சினிமாவுக்காக மட்டுமே இருக்கும் ஒரு மனிதரை, சினிமாவுக்கு எத்தனையோ புதுமைகளை, வியாபார வழிகளை, தொழில்நுட்ப ஆச்சரியங்களை அறிமுகப்படுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்த நபரை இப்படி அடிக்கடி, தவணை முறையில் சுயநலனுக்காக குத்திக் கிழிப்பதை விடுங்கப்பா.. புண்ணியமாப் போகும்..


Click it and Unblock the Notifications











