ஜனநாயகன் படத்துக்கு பிரச்னை.. எல்லாம் நன்மைக்கே.. விமல் இப்படி சொல்லிட்டாரே ப்பா
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அநேகமாக இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விசாரணை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு ஏகப்பட்ட பிரச்னை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஹெச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் படம் ஜனநாயகன். பகவந்த் கேசரி படத்திலிருந்து சில விஷயங்களையும், தன்னுடைய கற்பனையையும் சேர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறது. மொத்தம் 400 கோடி ரூபாய்வரை படத்துக்கு பட்ஜெட் வந்துவிட்டதாக தகவல்கள் கூற்கின்றன.
சென்சார் பிரச்னை: இது ஒருபக்கம் இருக்க விஜய் அரசியல் பிரவேசம் செய்திருப்பதால் இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பிரச்னை வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சென்சார் மூலம் பிரச்னை உருவெடுத்தது. படத்தை பார்த்துவிட்ட அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கேவிஎன் நிறுவனம். அதனை விசாரித்த நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

மேல்முறையீடு: ஆனால் அதனை எதிர்த்து மத்திய தணிக்கை குழு வாரியம் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு விசாரணையில் ஏற்கனவே நீதிபதி கொடுத்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அநேகமாக இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விசாரணை என்றும்; கண்டிப்பாக விஜய்க்கு ஆதரவாக தீர்ப்பு அமையும் என உச்சக்கட்ட நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
கண்டிப்பாக மெகா ஹிட்தான்: ஜனநாயகனுக்கு ஏற்பட்ட பிரச்னையில் திரைத்துறையில் பெரும்பாலானவர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். கமல்ஹாசன், பா.இரஞ்சித், அஜய் ஞானமுத்து, சிம்பு, ரவி மோகன், சனம் ஷெட்டி என பலரும் தளபதி பக்கம் நின்றார்கள். இனிமேல் இதுமாதிரி எந்த படத்துக்கும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
விமல் பேட்டி: இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விமலிடம் ஜனநாயகன் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்ட சென்சார் பிரச்னை எனக்கு எதுவும் தெரியாது. நான் குருவி, கில்லி ஆகிய படங்களில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். ஆனால் ஜனநாயகன் ரிலீஸ் தேதி குறித்து தெரியாது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications