ஜனநாயகன் விஜய் மீது செருப்பு வீச்சு போராட்டம்.. என்ன பைரசியில் பார்த்துட்டு கண்டிக்கிறாங்க?
சென்னை: ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். ரஜினி, கமல் தொடங்கி ஜீவா வரை அனைவருமே கண்டிக்கிறார்கள். இதை செய்தவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியிருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. அதேசமயம் படத்தை பைரசியில் பார்த்துட்டு இப்படி பேசுறாங்களே என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
தமிழின் முன்னணி நடிகரான விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தை யாரோ குத்தி, குதறி கொண்டிருக்கிறார்கள். முதலில் ரிலீஸில் பிரச்னை, அடுத்து மறு தணிக்கை அதிகாரிகள் பார்ப்பதில் பிரச்னை. இப்போதோ அனைத்துக்கும் மேலாக படத்தை இணையத்தில் லீக் செய்து படக்குழுவின் தலையை வெடிக்க வைத்துவிட்டார்கள். திடீரென நேற்று முன்தினம் முதல் ஐந்து நிமிட காட்சிகள் படத்திலிருந்து வெளியாகின. அடுத்த சில மணி நேரத்திலேயே முழு படமும் லீக்காகிவிட்டது. அது ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

திரையுலகம் கண்டனம்: இப்படி ஒரு மோசமான விஷயம் நடந்ததற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், ஜீவா என பலரும் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். இதை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இதனால் தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு என்றும் ஒருமித்த குரல்கள் எழுந்திருக்கின்றன.
யார் வெளியிட்டது?: அதேசமயம் வெளியாகியிருக்கும் ப்ரிண்ட்டில், EDI என்று இருப்பதால்; இது எடிட்டருக்கான ப்ரிண்ட். கண்டிப்பாக படக்குழு தரப்பிலிருந்தே இது லீக் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் புதிய தியரியை ஒருதரப்பினர் சொல்கிறார்கள். ஆனால் அதனை விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் தீவிரமாக மறுத்துவருகிறார்கள். மாறாக அவர்களோ, இதற்கு பாஜகவும், திமுகவும்தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். இப்படி பல பிரச்னைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பிரச்னையும் முளைத்திருக்கிறது.
என்ன பிரச்னை?: அதாவது ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டி காட்சிகள் வைத்திருக்கிறார்கள் என கண்டனங்கள் வருகின்றன. இயக்குநர் அமீர்கூட தனது வாட்ஸ் அப்பில், 'கசிந்திருக்கும் ஜனநாயகனிலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?.. இதுதான் தங்கள் அரசியலா?.. எப்போது மாறும் உங்கள் மனநிலை?' என கேள்வி எழுப்பியிருந்தார். அமீர் மட்டுமின்றி பலரும் இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுக்க் தொடங்கியிருக்கிறார்கள்.
செருப்பு வீச்சு போராட்டம்: இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி, விஜய் மீது இந்த விஷயத்துக்காக செருப்பு வீச்சு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதை பார்த்த இன்னொரு தரப்பினரோ, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது மிகப்பெரிய தவறுதான். அதேபோல் நீங்கள் ஒரு படத்தை பைரசியில் பார்த்ததால்தானே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரிந்திருக்கிறது. பைரசியில் பார்ப்பது மிகப்பெரிய தவறுதானே. விஜய்யை கண்டிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்தில் குதித்திருக்கிறார்கள். முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, பீஸ்ட் ஆகிய படங்களிலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் வெடித்தன. தற்போது மீண்டும் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















