ஜனநாயகன் நம்பர் 1.. விஜய் படம் இப்படி லீக் ஆகிடுச்சே?.. புலம்பும் திருப்பூர் சுப்ரமணியம்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்கானதுதான் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இப்படி ஒரு செயல் நடந்திருப்பது பெரிய பாதிப்பை உண்டு செய்திருக்கிறது. திரைத்துறையிலிருந்து பலரும் இந்த விஷயத்தில் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும் புலம்பியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இப்படம்தான் தளபதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி செய்த படக்குழு; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்து அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தில் சில மாற்றங்கள் சொல்ல; அதிலிருந்து பிரச்னை வெடித்தது. அவர்கள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதால் அறிவித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை.

நீதிமன்றத்தில் விவகாரம்: எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். ஆனால் அங்கேயும் பட தயாரிப்பு நிறுவனத்தினர் இழுத்தடிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் சில காரணங்களால் படத்தை பார்க்காமல் சில நாட்கள் கடத்தினார்கள். ஒருவழியாக அண்மையில் படத்தை பார்த்துவிட்டதாகவும்; மே மாதம் படம் ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது.
லீக்கான படம்: இந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அதனை கொண்டாடுவோம் என்று உறுதி எடுத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்கள் கொண்டாட்டத்துக்கு வேட்டு வைக்கும் விதமாக படமானது நேற்று இணையத்தில் லீக்கானது. முதலில் ஐந்து நிமிட காட்சிகளும் பிறகு முழு படமும் வந்துவிட்டது. இது ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பெரிய அதிர்வலைகளையும், அதிர்ச்சியையும் உண்டு செய்திருக்கிறது. அதுவும் வெளியான ப்ரிண்ட் எடிட்டுக்காக வைக்கப்பட்டிருந்த காப்பியாகும். அந்த காப்பி ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர் ஆகிய நான்கு பேரிடம் மட்டுமே இருக்கும் என்பதால்; அவர்கள் தரப்பிலிருந்துதான் படம் லீக்காகியிருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது.
வழக்கம்போல்: ஆனால் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவோ, 'எல். முருகனும், உதயநிதியும் சேர்ந்துதான் ஜனநாயகன் படம் ரிலீஸாகாமல் முடக்கினார்கள். இதேபோன்ற அழுத்தத்தை எம்ஜிஆருக்கும் திமுக கொடுத்தது. விஜய் எந்த அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டார். ஜனநாயகன் படம் லீக்கானது விஜய்க்கான மிரட்டல்' என வழக்கம்போல் இதிலும் திமுகவை இழுத்துவிட்டார். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்; ஜனநாயகன் லீக் ஆனது பற்றி பேசியிருக்கிறார்.
திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலில் ஐந்து நிமிட காட்சிகள் வந்தன. நள்ளிரவுக்கு மேல் முழு படமும் வந்துவிட்டது. காலையில் எழுந்து பார்க்கும்போது எங்களுக்கு பேரதிர்ச்சி. 400 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது கண்டிப்பாக நஷ்டம்தான். ஜனநாயகன் படம்தான் இந்த வருடத்தில் நம்பர் 1 படமாக இருந்தது. ஆனால் அது லீக்காகியிருப்பது தமிழ் சினிமாவுக்கே பெரிய இழப்பு. எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான். தயாரிப்பாளரின் நஷ்டத்தை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுகட்ட வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications















