அடுத்தடுத்து 5 தோல்விப் படங்கள்.. நாயகனாக நாக்கவுட்டான ஜெயம் ரவி.. பிரதர் இத்தனை கோடி நஷ்டமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவிக்கு தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறதே ஏன் என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர். கோமாளி படத்தின் வெற்றிக்குப் பிறகு சோலோ ஹீரோவாக ஜெயம் ரவி நடித்த 5 படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே அமைந்துள்ள நிலையில், அவரது மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியான ஜெயம் ரவியின் பிரதர் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்பது தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மனைவி ஆர்த்தியையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட சூழலில் ஜெயம் ரவிக்கு அடிமேல் அடி ஏன் விழுகிறது எந்த இடத்தில் மிஸ் ஆகுது என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
5 படங்கள் தோல்வி: கோமாளி படம் தான் கடைசியாக ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான அந்த படம் ஹிட்டடித்த நிலையில், மீண்டும் ஜெயம் ரவி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஏகப்பட்ட படங்கள் வரிசையாக கிடைத்தாலும் அவருக்கு வெற்றி பெரிதாக கிடைக்கவில்லை. பூமி, அகிலன், இறைவன், சைரன் மற்றும் பிரதர் என வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறார்.
மல்டி ஸ்டார் லக்: பொன்னியின் செல்வன் படம் மட்டுமே இதில் விதிவிலக்காக அமைந்தது. அந்த படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு என மல்டி ஸ்டார் படமாக வெளியாகி மணிரத்னம் இயக்கிய நிலையில், ஜெயம் ரவிக்கு இடையே அந்த படம் மட்டுமே வெற்றி வாகையை சூடியது. ஆனால், சோலோவாக ஜெயம் ரவி ஹிட் கொடுக்க ரொம்ப காலமாக தவித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை என்கின்றனர்.
அடிவாங்கிய பிரதர்: இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் அமரன் படம் மட்டுமே தமிழில் தப்பித்து வெற்றி பெற்றது என்றும் கவினின் ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் என இரு படங்களும் வெற்றிப் பெறவில்லை என்கின்றனர். தனி ஒருவன் படம் வெளியான போதே தமிழ்நாட்டில் 25 கோடியளவுக்கு ஷேர் கிடைத்தது. ஆனால், பிரதர் படத்தின் மூலம் வெறும் 4 கோடி ரூபாய் தான் ஷேர் கிடைத்திருப்பதாகவும் இதுதான் ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே ரொம்பவே குறைவான வசூல் ஈட்டிய படம் என்றும் கூறுகின்றனர்.
கிருத்திகா உதயநிதி காப்பாற்றுவாரா?: ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து விட்டு அக்கா பாசத்தை காட்டுகிறேன் என்றும் குடும்ப பாசத்தை பொழிகிறேன் என பிரதர் படத்தில் நடித்த நிலையில், படத்தை யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர். அடுத்து வெளியாக காத்திருக்கும் காதலிக்க நேரமில்லை படம் தான் ஜெயம் ரவிக்கு கை கொடுக்க வேண்டும் என்கின்றனர். அந்த படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி என்பதால் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஹீரோயினாக தேசிய விருது வென்ற நித்யா மேனன் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த படம் ஹிட் அடித்தால் தான் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜீனி படமும் கைகொடுக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











