எனது பிரிவு.. நிறைய வதந்திகள்.. அதான் அப்படி.. மனம் திறந்து பேசிய ஜெயம் ரவி
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியான ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். ஆர்த்தியை விட்டு பிரிவதாக ரவிதான் முதலில் பொதுவெளியில் சொன்னார். ஆனால் ஆர்த்தியோ முதலில் தனக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் பேசினார். பிறகு ரவி தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றதன் காரணமாக ஆர்த்தியும் இந்த பிரிவுக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார். இருவரும் அண்மையில்கூட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்தச் சூழலில் தன்னுடைய பிரிவு குறித்து பேசியிருக்கிறார் ரவி.
சினிமாவில் பெரிதாக சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கும் அவர்; சக ஹீரோக்களிடம் எந்த ஈகோவும் இல்லாமல் பழகக்கூடியவர். இவர் ஆர்த்தி என்பவரை 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆர்த்தியின் தாயார் ஒரு தயாரிப்பாளர் என்பதும்; ஜெயம் ரவியை வைத்து சில படங்களை தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிந்த ரவி: சூழல் இப்படி இருக்க ஜெயம் ரவியை ஆர்த்தியும், அவரது தாயும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. இதனையடுத்து அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்த்தியை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ரவி. அதனையடுத்து பேசியிருந்த ஆர்த்தி, 'ரவியிடம் தான் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. ரவியின் இந்த முடிவு தனக்கு தெரியாது' என்று கூறியிருந்தார்.
கெனிஷா: இதனைத் தொடர்ந்து ரவிக்கும், பாடகியான கெனிஷாவுக்கும் தொடர்பிருப்பதாகவும்; அதனால்தான் இரண்டு பேரும் பிரிந்துவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. அதுகுறித்து மௌனம் காத்த ஜெயம் ரவி பிரதர் படத்தின் நிகழ்ச்சியின்போது; தனக்கும் கெனிஷாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு ஆன்மீக மையம் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். எனது விவாகரத்து விஷயத்தில் அவரை இழுத்துவிடாதீர்கள் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்: இந்நிலையில் கடந்த மாதம் ஆர்த்தியும், ஜெயம் ரவியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் இருவரும் ஆலோசனை மையத்தில் ஆலோசனை பெற்றனர். இருந்தாலும் விவாகரத்து முடிவிலிருந்து ஜெயம் ரவி பின் வாங்காததால் இந்த விவாகரத்து கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. ரவியின் நடிப்பில் கடைசியாக பிரதர் படம் வெளியானது. அடுத்ததாக காதலிக்க நேரமில்லை. GENIE ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.
ட்ரெண்டாகும் பேட்டி: தற்போது ஜெயம் ரவி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில், "எனது பிரிவை பற்றி வெளியில் சொல்லியிருக்க தேவையில்லைதான். ஆனால் அதுபற்றி வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. எனக்கு என்னதான் ஆச்சு என்று பேசிக்கொண்டும் இருந்தார்கள். என்னுடைய படங்களும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வதந்தி பரவக்கூடாது என்பதற்காகத்தான் நானே அதனை வெளியில் சொல்லிவிட்டேன். என்னுடைய பட ப்ரோமோஷனில் என் தனிப்பட்ட விஷயத்தை சொல்லக்கூடாது என்று நினைத்ததால்தான் அதற்கு முன்பாகவே சொல்லிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











