Vijay - வெங்கட் பிரபுவால் விஜய்க்கு வந்த ஆபத்து?.. GOAT படத்தால் என்னனமோ கிளம்புதே.. பரபரப்பு தகவல்
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் நீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் இப்போதைக்கு டாப்பில் இருப்பவர் விஜய். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக இதனை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

GOAT ஸ்குவாட்: இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறார். பல வருடங்கள் கழித்து டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழில் GOAT படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதேபோல் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
போஸ்டர்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. புத்தாண்டையொட்டி இரண்டு போஸ்டர்களும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு போஸ்டரும் வெளியாகின. பொங்கலுக்கு வெளியான போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ உடையில் கையில் மெஷின் கன்னுடன் சிரித்துக்கொண்டிருக்கும்படி இருந்தார்கள். அது பெரும் வரவேற்பை பெற்றது.
ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்ததாக தாய்லாந்து மற்றும் துருக்கிக்கு சென்றது படக்குழு. அங்கு வைத்து முக்கியமான காட்சிகள் மற்றும் ஆக்ஷன் சீக்வென்ஸுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடைபெற்றுவருவதாக ஒரு தகவல் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்க்கு ஆபத்து?: இலங்கையில் ஷூட்டிங் நடப்பதாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய்க்கு வெங்கட் பிரபுவால் ஆபத்து வந்துவிட்டதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "எனக்கு ஒரு நண்பர் வீடியோ அனுப்பி வைத்து விஜய்க்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாக சொன்னார். என்னவென்று விசாரித்து பார்த்தால், ஜீ தமிழில் நடந்த ரியாலிட்டி ஷோவான சரிகமவில் ஈழத்து சிறுமி கில்மிஷா என்பவர் பாடல் பாடி முதல் பரிசை வென்று சென்றார்.
அவர் இலங்கைக்கு சென்றதும் அவருடன் இலங்கை அதிபர் உள்ளிட்டோர் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால், எங்கள் நாட்டில் ஈழ மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம் என்பதைத்தான். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை.
இந்த சூசகமான நடவடிக்கையை சிங்கள அரசு தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக இலங்கைக்கு வருவதாக இருந்தார். ஆனால் ஈழ தமிழர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தோம். அதனையடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டுவிட்டார். அவரும் முத்தையா முரளிதரனும் நெருங்கிய நண்பர்கள்.
நாங்களும், ஈழ தமிழர்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்ற போலி உணர்வை உலகத்திடம் உணர்த்த முத்தையா முரளிதரனை வைத்தே அசைன்மெண்ட் செய்திருக்கிறது. இப்போது விஜய்யை அழைத்துக்கொண்டு வெங்கட் பிரபு இலங்கைக்கு வந்து GOAT ஷூட்டிங்கை செய்துவருகிறார். முக்கியமாக தமிழர்கள் இருக்கும் பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது.
இது ஷூட்டிங்கோடு நின்றால் பரவாயில்லை. மாறாக விஜய்யுடன் இலங்கை அரசை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வேலை நடக்கும். அது முத்தையா முரளிதரன் மூலமாகக்கூட நடக்கலாம். இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான் அவரது படங்கள் 200 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலிக்கின்றன. அதுமட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சிங்கள அதிகாரத்தினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அது வெளியானால் ஈழ தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும். மேலும் அவரது அரசியல் வருகைக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம். இப்படி அவருக்கு ஆபத்து இருக்கிறது. இதனை வெங்கட் பிரபுவே ஏற்படுத்திக்கொடுக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











