விஜயகாந்த்தின் நிறத்தை வைத்து அசிங்கப்படுத்தினாரா ராதிகா?.. அய்யயோ பிரபலம் என்ன இப்படி சொல்றாரு
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இறக்கும்வரையில் பலரது அன்பை சம்பாதித்த விஜயகாந்த் தான் வாழும்போது சில நடிகைகளால் அசிங்கப்படவும் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் விஜயகாந்த்தை ராதிகா அசிங்கப்படுத்தியதாக வடிவுக்கரசி கூறினார் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
நடிக்க மறுத்த கதாநாயகிகள்: விஜயகாந்த் வளர்ந்துவந்த நேரத்தில் அவரது நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளவில்லை கேப்டன். மாறாக திறமையை வளர்த்து வெற்றியை பெற்றால் ஒதுக்கியவர்களும் வருவார்கள் என்ற கோட்பாட்டின்படி இயங்கி; தன்னை ஒதுக்கியவர்களையே மீண்டும் தன்னுடன் நடிக்கும்படி செய்தார்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசியல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் - ராதிகா குறித்து வடிவுக்கரசி சொல்லியதாக ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் செய்யாறு பாலு. இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "விஜயகாந்த் வளர்ந்துவந்த சமயத்தில் வடிவுக்கரசி ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தார். அப்போது நான் ஒரு படம் தயாரிக்கவிருக்கிறேன் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த்தோ, மோகனை வைத்து படம் எடுங்களேன் என்று சொன்னாராம். அதற்கு வடிவுக்கரசியோ அவரிடம் கேட்டுவிட்டேன் அவர் நோ சொல்லிவிட்டார் என்றிருக்கிறார்.
விஜயகாந்த் கமிட்: பிறகு வடிவுக்கரசி விஜயகாந்த்திடம், நான் நடிக்கிறேன் என்று நீங்கள் சொல்லவே இல்லையே என்றிருக்கிறார். அதற்கோ விஜயகாந்த், நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்டீர்களா என சொல்லிவிட்டு; நான் நடிக்கிறேன் மேடம் சம்பளத்தை எல்லாம் விடுங்க என்று சொல்லி கமிட்டாகிவிட்டார். அதனையடுத்து அவருக்கு ஜோடியாக நடிக்க ராதிகாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராதிகாவோ, என்னது அந்த கருப்பன்கூட நான் நடிக்கணுமா என்று அசிங்கப்படுத்தியிருக்கிறார். பிறகு மாதுரி அந்தப் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் அன்னை என் தெய்வம். இதனை வடிவுக்கரசியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்" என்று செய்யாறு பாலு குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











