தலை வணங்குகிறேன் அஜித் சார்.. மரியாதை அதிகரித்திருக்கிறது.. ஓபனாக பேசிய பிரபலம்
சென்னை: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் அஜித்குமார் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார். அவர் தனது கரியரையும், குடும்பத்தையும், கார் ரேஸையும் கவனித்துக்கொண்டு தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால் அஜித் ரசிகர்களோ சமீப காலமாக அஜித்தை கடவுள் என்று கூறிவருகிறார்கள். ஒருகட்டத்தில் பொது இடங்களில் எல்லாம் அந்த கோஷத்தை எழுப்ப தொடங்கினர். இந்தச் சூழலில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அஜித்குமாருக்கு என்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் ப்ரோமோஷனிலோ, பத்திரிகையாளர் சந்திப்பிலோ, ரசிகர்கள் சந்திப்பிலோ ஈடுபடாவிட்டாலும் அவரது படம் வந்தால் போதும்; அவரை திரையில் பார்த்தால் போதும் என்று தவம் இருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கான ரசிகர்களும், அவரது படத்துக்கான ஓபனிங்கும் கொஞ்சம்கூட குறையவில்லை என்பதுதான் திரைத்துறையில் பெரும் ஆச்சரியம்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி: அவர் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் விடாமுயற்சி படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்திருக்கும் அவர்; குட் பேட் அக்லியின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். இந்த இரண்டு படங்களின் மீதும் அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இருக்கிறார்கள்.
ரசிகர்களின் கோஷம்: இது ஒரு பக்கம் இருக்க அவரது ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷங்களை சமீபமாக எழுப்ப ஆரம்பித்தார்கள். முதலில் தங்களுக்குள் மட்டும் சொல்லிக்கொண்ட அவர்கள்; ஒருகட்டத்தில் பொது நிகழ்ச்சிகளிலும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க அஜித் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,"சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தணன் வீடியோ: அஜித்தின் இந்த அறிக்கைதான் நேற்றிலிருந்து திரைத்துறையில் பேசுபொருளாக இருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து பேசுகையில், "தலை வணங்குகிறேன் அஜித் சார். இந்த அறிக்கையை அஜித் அவ்வளவு நேர்த்தியாக கட்டமைத்திருக்கிறார். ஒருகாலத்தில் அஜித்குமார் காட்டாற்று வெள்ளம் போல் பேசியவர். மிகப்பெரிய தயாரிப்பாளர் கேஆர்ஜியையே அவர் ஒருமையில் பேசினார். ஆனால் இப்போது கங்கை வெள்ளம் போல் இருக்கிறார்.
மரியாதை கூடுகிறது: மற்ற நடிகர்கள் ரசிகர்கள் மீது பெரிதாக அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அஜித் அப்படி இல்லை. அவர் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருக்கத்தான் செய்தன. அதனால்தான் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தேன். ஆனால் இந்த அறிக்கையை படித்த பிறகு அஜித் மீது எனக்கு மரியாதை அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











