ரஜினிக்கும் மோகன் பாபுவுக்கும் இப்படி ஒரு நட்பா?.. அடேங்கப்பா செம ஃப்ரெண்ட்ஷிப்
ஹைதராபாத்: மோகன் பாபு நேற்று செய்தியாளர்களை தாக்க சென்றதுதான் டோலிவுட்டின் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறது. தனது மகனுக்கும், தனக்கும் உள்ள பிரச்னை காவல் நிலையம் வரை சென்றதை அடுத்து டென்ஷனில் இருந்த அவர்; தனது வீட்டுக்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத்தான் அவர் அடிப்பதற்கு பாய்ந்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத நட்பு பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான மோகன் பாபு முதலில் உடற்கல்வி ஆசிரியராக சென்னையில் தனது பணியை தொடங்கினார். ஆனால் அவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னை சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதற்கு பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழிலும் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.

மகனுடன் பிரச்னை: அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு பிறந்தவர்கள் லட்சுமி, விஷ்ணு ஆவர். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் மனோஜ். சூழல் இப்படி இருக்க மனோஜ் சில சமூக விரோதிகளுடன் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார் என்றும்; அவரால் எனக்கும் எனது சொத்துக்கும் பாதுகாப்பின்மை இருக்கிறது. அதன் காரணமாக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்தார். அதனையடுத்து மனோஜ் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தாக்க சென்ற மோகன் பாபு: அதேபோல் மனோஜும் ஒரு புகாரை அளித்திருக்கிறார். ஆனால் அந்தப் புகாரில் மோகன் பாபுவின் பெயர் இடம்பெறவில்லை. சூழல் இப்படி இருக்க இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்றார்கள். அப்போது டென்ஷனான மோகன் பாபு செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி அவர்களையே தாக்குவதற்கு சென்றார். இதனால் செய்தியாளர்கள் சிதறி ஓடினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.
ரஜினியுடன் நட்பு: இதற்கிடையே ரஜினிகாந்த்துடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் மோகன் பாபு. இரண்டு பேரும்தான் ஒன்றாக சினிமா கல்லூரியில் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஐடியா வேண்டுமென்றால் இரண்டு பேருமே பரஸ்பரம் பரிமாறிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன் பாபுவுக்காக ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ரஜினிக்கும், மோகன் பாபுவுக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், "ரஜினியும், மோகன் பாபுவும் ஒன்றாக சினிமா கல்லூரியில் படித்தார்கள். அப்போது அவர்களுக்கு டீ குடிக்கக்கூட காசு இல்லை. இரண்டு பேரும் ஒரு கடைக்கு சென்று ஒரு டீயை வாங்கி பாதி பாதி குடித்தவர்கள். அதேபோல் இருவரில் யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் இரண்டு பேருமே களத்தில் இறங்குவார்கள்.
நாட்டாமை ரீமேக்: முக்கியமாக நாட்டாமை படத்தை பார்த்துவிட்டு ஆர்.பி.சௌத்ரியிடம் சென்ற ரஜினிகாந்த், நாட்டாமை படத்தின் தெலுங்கு ரைட்ஸை மோகன் பாபுவுக்கு வாங்கிக்கொடுத்தார். ரஜினிக்காக மோகன் பாபு சில வருடங்கள் கழித்து மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி அந்தப் படத்தை தயாரித்தார். படமும் மெகா ஹிட்டானது. அதேபோல் மோகன் பாபு கேட்டுக்கொண்டதற்காக அந்தப் படத்தில் ரஜினிகாந்த்தும் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். அந்த அளவுக்கு அவர்களது நட்பு பலமானது" என்றார்.


Click it and Unblock the Notifications











