Ajith - பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.. அஜித்துக்கு சப்போர்ட் செய்யும் சித்ரா லட்சுமணன்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.
அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுங்கியிருக்கும் அஜித்: இதற்கிடையே விஜயகாந்த் உயிரிழந்தபோது ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய், சூர்யா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அஜித்குமாரோ இரங்கலும் தெரிவிக்கவில்லை; நினைவிடத்துக்கும் வரவில்லை. அதனால் அவர் மீது ஒருதரப்பினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் அஜித்தை புறக்கணிப்போம். அவர் எதிலும் கலந்துகொள்ள மறுக்கிறார் என்றிருந்தார்.
சித்ரா லட்சுமணன் சப்போர்ட்: அந்தணன் அப்படி பேசியதற்கு அஜித்தின் ரசிகர்கள் கடும் கண்டனத்தை முன்வைத்தனர். இந்நிலையில் நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், "அந்தணன் பேசிய முழு வீடியோவையும் பார்க்கவில்லை. நான் பார்த்த கொஞ்சத்தை வைத்து என்னுடைய கருத்தை சொல்கிறேன். யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. எங்கே வர வேண்டும். வரக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு நடிகருக்கும் தனிப்பட்ட கொள்கை என்ற ஒன்று இருக்கும். அதன்படிதான் அவர்கள் நடந்துகொள்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











