தளபதி விஜய்யின் அரசியல் வெற்றி.. ஜூனியர் NTR அரசியலில் களமிறங்குகிறாரா? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வரப்போகிறார்கள் என்ற தகவல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது புதிதல்ல. அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், வரும் ஜூலை 18-ஆம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தின் மூலம் அரசியல் பயணத்தை தொடங்கப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தகவலுக்கு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் அரசியல் வருகை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அகில இந்திய ஜூனியர் என்டிஆர் ரசிகர் மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூனியர் என்டிஆர் அரசியலில் களமிறங்குகிறார் என்றும், ஜூலை 18-ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் பரவி வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் RAW NTR என்ற அமைப்புக்கும் ஜூனியர் என்டிஆருக்கும், அவரது அலுவலகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் ரசிகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அமைப்புக்கு ஜூனியர் என்டிஆர் சார்பில் அறிக்கை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களை அறிவிக்கவோ, அரசியல் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவோ அதிகாரம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொய் தகவல்களை நம்பாதீங்க: ஜூனியர் என்டிஆர் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், சமூக நலத்திட்டங்கள், புதிய முடிவுகள் அல்லது எதிர்கால நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவை அவரது அதிகாரப்பூர்வ அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும் ரசிகர் மன்றம் குறிப்பிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக அரசியல் என்ட்ரி குறித்து கிளம்பிய பரபரப்புக்கு இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுதான் இறுதியான விளக்கம் என்றும், இனிமேல் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் மாதிரி: இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் தற்போது முழு கவனத்தையும் சினிமாவில்தான் செலுத்தி வருகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர் அரசியலில் களமிறங்குகிறார் என்று வதந்திகள் பரவியதும் பலரும் தமிழ்நாட்டில் எப்படி தளபதி விஜய் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாரோ, அதேபோல் ஜூனியர் என்டிஆரும் செய்வார் என்று ரசிகர்கள் பலரும் இணையத்துல் ஃபயர் விட்டு வந்தார்கள். அப்படிப்பட்டவர்களின் ஆசைக்கு எல்லாம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.


Click it and Unblock the Notifications