சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையும் படம் எப்படி இருக்கும்?.. தயாரிப்பாளர் தாணு ஓபன் டாக்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது; அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. மாநாடு படத்துக்கு பிறகு அவ நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் அவருக்கு நல்ல ஹிட்டையே கொடுத்தன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார்.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவரும் சிம்பு இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார் அவர். இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்ற அவர் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தவகையில் அவர் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் ரொம்பவே பருமனாக காணப்பட்டார்.

தரமான கம்பேக்: அதனைப் பார்த்து ஒருதரப்பினர் கிண்டலும் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் சிம்புவின் எனர்ஜியை பார்த்த ரசிகர்கள், அட நம்ம எஸ்டிஆர் பழையபடி வந்துட்டாரே என்று உற்சாகத்தோடு கூறினார்கள்.
செம பெயர்: அடுத்ததாக அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்தார். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்கியபாடில்லை.
தக் லைஃப்: இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வந்தது. அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டானார் சிம்பு. அப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசரிலும் சிம்புவின் கெட்டப்பும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
தாணு பேட்டி: இந்நிலையில் சிம்புவும் தேசிங்கு பெரியசாமியும் இணைந்திருக்கும் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கப்போகும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் கதையை படமாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. அதன் காரணமாக பல ஹீரோக்கள் நடிக்க முன்வரவில்லை. இருந்தாலும் சிம்பு ஒத்துக்கொண்டார். இந்தப் படத்துக்கு மட்டும் சரியான பட்ஜெட் கிடைத்தால் பாகுபலி படத்தைவிடவும் இரண்டு மடங்கு இருக்கும்" என்றார்,.


Click it and Unblock the Notifications











