தசாவதாரம்: கமலின் புது உத்தி
தசாவதாரம் படத்தின் மார்க்கெட்டிங்கை படு வித்தியாசமான உத்தியில் பண்ண கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சினிமா உலகில் புரட்சி படைக்கும் வகையில் தசாவதாரம் படத்தின் மார்க்கெட்டிங் முறை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் எப்.ஐ.சி.சி. அமைப்பின் 2 நாள் மாநாடு நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தசாவதாரம் படத்தின் மார்க்கெட்டிங் வித்தியாசமான முறையில் இருக்கும் என்று கூறினார்.பின்னர் இதுகுறித்து கமல் விளக்குகையில், தமிழ் சினிமா வியாபாரத்தில் இது ஒரு புதிய முறையாக இருக்கும். எதிர்காலத்தில் சினிமா வர்த்தகத்தில் பல மாற்றங்களை கொண்டு வரும் முன்னோடி மாற்றமாகவும் இது இருக்கும்.
தசாவதாரம் படத்தின் டிக்கெட்டுக்களை விற்பனை செய்வதில் மட்டும் அல்லாமல், படத்தின் வியாபாரத்தையும் வித்தியாசமாக செய்யவுள்ளோம்.
படத்தின் டிக்கெட்டுக்களை வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்கவுள்ளோம். நகரங்களில் உள்ள பெரிய பெரிய கடைகள், வணிக வளாகங்களில் விற்கப் போகிறோம். இதன் மூலம் பிளாக் டிக்கெட் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும்.
நகரங்களில் இன்று பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள், ரீடெய்ல் கடைகள் நிறைய வந்து விட்டன. இவற்றின் மூலமாக டிக்கெட்டுக்களை விற்க உத்தேசித்துள்ளோம். இதுதொடர்பாக சிலருடன் பேசியுள்ளேன் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











