கமல்ஹாசன் பிறந்தநாள்.. லண்டனில் பிரமாண்ட வீடு.. மொத்த சொத்து மதிப்பு 300 கோடி.. மிரளவைக்கும் ஆண்டவர்
சென்னை: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் தூண்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கடைசியாக நடித்த தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் தோல்வியை சந்திக்க; அடுத்ததாக அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருகிறார். விரைவில் அதன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இன்று அவர் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக கேமரா முன்பு தோன்றிய கமல்ஹாசனுக்கு சினிமாவில் தெரியாத வேலையே இல்லை. அத்தனை வேலைகளையும் கொஞ்சமேனும் தெரிந்துவைத்திருக்கும் அவர் ஒரு சகாப்தமாக இருந்துகொண்டிருக்கிறார். தனது படங்களில் ஏகப்பட்ட புது விஷயங்களை அறிமுகப்படுத்தி அனைவருக்குமே பாதையையும் போட்டு கொடுத்திருக்கிறார். அதனால் அவரை மதிக்காதவர்களே இந்திய திரைத்துறையில் கிடையாது.
அரசியல் டூ சினிமா: ரஜினிக்கு மட்டுமின்றி பல நடிகர்களுக்கு போட்டியாக ஓடிக்கொண்டிருந்த கமல் திடீரென அரசியல் பிரவேசம் செய்தார். தான் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் பயணம் திருப்தி தராததால்; முழுமையாக கவனம் செலுத்துவதை குறைத்து சினிமாவிலும் தனது கவனத்தை கொஞ்சம் திருப்பினார். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தரமான ரீ என்ட்ரி கொடுத்தார் கமல். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

முக்கியமான படம்: விக்ரம் படம் வருவதற்கு முன்பு வெளியாகிக்கொண்டிருந்த தமிழ் படங்கள் 100 கோடி ரூபாயை வசூலிக்கவே திணறிக்கொண்டிருந்தன. அதேசமயம் கேஜிஎஃப் உள்ளிட்ட வெளிமாநில படங்கள் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆஃபிஸை ரூல் செய்ய ஆரம்பித்தன. விக்ரம் வந்துதான் 300 கோடி ரூபாய்வரை அள்ளி வசூலில்ம் தமிழ் படங்களும் சளைத்ததில்லை என்பதை திரைத்துறைக்கு ஆணித்தரமாக உணர்த்தியது.
வரிசைகட்டும் தோல்விகள்: விக்ரம் கொடுத்த மெகா வெற்றி பெரிய உற்சாகத்தை கமலுக்கு உண்டு செய்திருக்கக்கூடும். அதன் காரணமாகத்தான் பரணில் கிடந்த இந்தியன் 2 பணிகளை மீண்டும் முடுக்கிவிட்டார். ரொம்ப பெரிய நம்பிக்கையோடு உழைக்கவும் செய்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் தடம் தெரியாமல் போனது.
அன்பறிவு கூட்டணி: இரண்டு சீனியர் இயக்குநர்களும் கமலுக்கு தீராத வடுவையே கொடுத்தார்கள். இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். விரைவில் அவர்களது பட பணிகள் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் இன்று அவர் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
மொத்த சொத்து மதிப்பு: மேலும் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரிடம் அசையும் சொத்துகளின் மதிப்பு 60 கோடி ரூபாய்வரை இருக்கிறதாம். அதேபோல் அசையா சொத்துகளின் இப்போதைய மதிப்பு கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய்வரும் என்றும் தெரிகிறடு. ஆக மொத்தம் அவரிடம் 300 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க லண்டனில் அவருக்கு பிரமாண்ட வீடு இருப்பதாகவும், BMW 730 LD, Lexus Lx 570, Range Rover உள்ளிட்ட சொகுசு கார்களும் அவரிடம் வரிசைகட்டி நிற்கின்றன. ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவருக்கு 49 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











