ரஜினியுடன் நடிக்கும் படத்தின் நிலைமை என்ன?.. விஜய்க்கும் ஒரு குட்டு.. கமல்ஹாசன் இப்படி போட்டு அடிச்சிட்டாரே
சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சேர்ந்து நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக KHXRK என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க; அனிருத் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி படத்தை தயாரிக்கிறார். இதன் அறிவிப்பு வீடியோ கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் தெலங்கானாவில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ரஜினியும், கமலும் இந்திய சினிமாவின் தூண்களாகவும், பெருமிதமாகவும் திகழ்கிறார்கள். அவர்கள் தங்களது கரியரது ஆரம்பத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்தாலும்; ஒருகட்டத்தில் இரண்டு பேரும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். கடைசியாக தில்லு முல்லு படத்தில் கமல் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அதற்கு பிறகு ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கவே இல்லை. அவர்கள் திரைத்துறையிலிருந்து ரிட்டையர்டு ஆகும் முன்னர் எப்படியாவது அவர்களை சேர்ந்து நடிக்க வைத்திட வேண்டுமென்ற முயற்சிகள் தொடங்கின.

லோகேஷுக்கு நோ; நெல்சனுக்கு யெஸ்: அதன்படி அவர்களை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் சொன்ன கதை ரொம்பவே வயலன்ஸாக இருந்ததாகவும்; ரஜினியும், கமலும் லைட் ஹார்ட்டட் படத்தில் நடிக்க ஆசைப்பட்டதால்; அவர் சொன்ன கதையை ரிஜெக்ட் செய்துவிட்டதாகவும் தெரிகிறது. அவரைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரை இயக்குநராக ஓகே செய்திருக்கிறார்கள். ஏற்கனவே கமலை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், ரஜினியை வைத்து ஜெயிலர் 1, ஜெயிலர் 2 படங்களையும் நெல்சன் இயக்கியிருக்கிறார்.
வெளியான அறிவிப்பு வீடியோ: படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த மாதம் வெளியானது. படத்துக்கு KHXRK என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி இப்படத்தை தயாரிக்கிறார். இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்துடைய அறிவிப்பு வீடியோ கடந்த மாதம் வெளியானது. இரண்டு பேரும் ரெட்ரோ லுக்கில் கலக்கினார்கள். அதேசமயம் அந்த வீடியோ சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது.
யார் ஹீரோ?: அந்த வீடியோவில் வருவது மாதிரி தலையாய கேள்வி என்னவென்றால் இப்படத்தில் யார் ஹீரோ என்பதுதான். அநேகமாக இப்படத்தில் இரண்டு பேருமே ஹீரோவாக இருப்பார்கள்; கதையில் நடக்கும் ஒரு சூழல் அவர்களை பிரித்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கமல்ஹாசன் ஹீரோவாகவே நடிக்கட்டும்; ரஜினிகாந்த் வில்லனாக நடித்தால் மாஸாக இருக்கும் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து பேசியிருக்கிறார் கமல்.
கமல் செய்தியாளர் சந்திப்பு: தெலங்கானாவில் நடந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய அவர்; செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் முடிந்த பிறகுதான் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். எனக்கு இங்கே வேலை இருக்கிறது. விஜய் பெரம்பூரில் நிற்பதை நான் ஏன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். எனக்கு வேலைகள் இருக்கின்றன. அதை நான் பார்க்க வேண்டும்" என்றார். அவரது இந்த பதில் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















