சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா கமல்ஹாசன்?.. நண்பர்கள் அப்படி சொல்லிட்டே இருக்காங்களாம்.. இதுதான் முடிவு
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே அவரது கரியரில் மோசமான தோல்வியை சந்தித்த படங்கள் என்ற பெயரை பெற்றுவிட்டன. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் கமல்.
மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து அரசியல் களத்துக்கு சென்ற கமல் அங்கிருந்து வந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து ஆரம்பித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக தெம்பாக உணர்ந்த அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.
ட்ரோலை சந்தித்த படங்கள்: அப்படி அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். இவர்கள் இருவருடன் சேர்ந்து ஏற்கனவே இந்தியன், நாயகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் கமல். அதனால் பெரிய எதிர்பார்ப்பு படங்களுக்கு இருந்தது. ஆனால் இரண்டுமே படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் அவரது கரியரிலேயே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு விழுந்த அடி கண்டிப்பாக கமலுக்கு பெரிய தழும்பை கொடுத்திருக்கும்.

அடுத்த படம்: சீனியர்களை நம்பி சென்று தோல்வியை கொடுத்ததால்; இப்போது இளம் இயக்குநர்கள் மீது கமலின் பார்வை திரும்பியிருக்கிறது. அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர்களாக இருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக முந்தைய படங்கள் போல் இல்லாமல் இது வேறு மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தயாரிப்பிலும் பிஸி: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர்; மறுபக்கம் தயாரிப்பையும் விடவில்லை. அமரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை ஹீரோவாக வைத்தும் ஒரு படத்தை தயாரிக்கிறது. அதனை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்து அவர் விலகிவிட்டதும்; தற்போது பார்க்கிங் இயக்குநரின் பெயர் அடிபடுவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பம்பரமாய் சுற்றிவரும் கமல்; ஓய்வு பெறுவது பற்றி பேசியிருக்கிறார்.
கமல்ஹாசன் பேச்சு: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு பழைய காம்போ பிடிப்பதில்லை. அவர்களுக்கு புதிய காம்போ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மோசமான படங்கள் வந்தால் ஓய்வு பெற வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் எனது நண்பர்கள் மோசமான படத்துடன் ஓய்வு பெறாதே. நல்ல படம் கொடுத்துவிட்டு ஓய்வு பெறு என சொல்கிறார்கள். அந்த நல்ல படத்துக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











