தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்.. விஜய்க்கு அட்டகாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா சந்திரசேகருக்கு மகனாக நடிகர் விஜய் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்தார். இன்று 50 வயதை நடிகர் விஜய் கடந்துள்ள நிலையில், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதில் இருந்து அப்பா இயக்கும் படங்களை பார்த்து வளர்ந்த விஜய் தானும் சினிமாவில் நடிகராக வேண்டும் என முடிவெடுத்த நிலையில், 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிறு வயதிலிருந்தே சினிமா: எஸ்.ஏ. சந்திரசேகர் கேப்டன் விஜயகாந்தை வைத்து பல படங்களும், ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். சிறு வயதிலேயே சினிமாவில் நடிகர் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக 1984ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான வெற்றி படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்க வைத்திருந்தார். அதன் பின்னர் குடும்பம், ரஜினிகாந்த் நடித்த நான் சிகப்பு மனிதன், விஜயகாந்தின் வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்துள்ளார்.
கொண்டாட்டம் வேண்டாம்: எப்போதுமே விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவலில் களைகட்டும் தமிழ்நாடு முழுவதுமே விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகளை செய்வது வழக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய் மாறியுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரியளவில் செய்ய தவெக நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் முடிந்தவரை உதவி செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கமல் வாழ்த்து: நடிகர் பிரபுதேவா காலையிலேயே கோட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை ஷேர் செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது, "அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்கள் நேற்று இரவு முதலே வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் அப்டேட் கொண்டாட்டம்: விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை என்று சொன்னாலும், ரசிகர்களுக்காக இன்னொரு பக்கம் கோட் அப்டேட் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. கோட் ஷாட்ஸ் டிரெண்டாகி வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் விஜய் மற்றும் பவதாரிணியின் குரலில் யுவன் இசையில் வெளியாக காத்திருக்கிறது. தளபதி 69 படத்தின் அப்டேட் வருமா? என்றும் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











