ரசிகர்களின் ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன் - கமல் பிறந்த நாள் செய்தி
கமல்ஹாஸன் இன்று தனது 57 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இந்த பிறந்த நாளுக்கு அவர் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தி:
பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன்.
என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான். அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச் செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான். அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக் கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.
முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்லுவது. நானும் என் ரசிகன்தான். என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும்.
கமல் வழங்கும் பிறந்த நாள் செய்தி- வீடியோ
என்னைப் பொருத்தவரை நான் நடிகன், கலைஞன். மலர் போன்றவன். அதனால் அதை எப்படிப் பாதுகாக்கணுமோ அப்படி பாதுகாத்துக் கொள்வேன். விமர்சனங்களை மெலிதாகச் சொல்லி, வாடிவிடாமல் இருக்க அவ்வப்போது பாராட்டு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி, வணக்கம்!
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












