ஹீரோ .. ஹீரோ ..
என்னை வைத்து சினிமா வியாபாரம் செய்பவர்களுக்காக எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டேன்என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ஏழை, எளியவர்களுக்கு 10,000 கிலோஅரிசி வழங்கப்பட்டது. இதை வழங்கிய கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கொடிக்கும், தேசியக் கொடிக்கும் கூட நம்மில் நிறையப் பேருக்கு வித்தியாசம் தெரியவில்லை.சுதந்திரம் என்பது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு. அதை நாம் சரியாக கையாள்கிறோமா என்றுபார்க்க வேண்டும். வெறும் விடுமுறை நாளாக இதைக் கருதக் கூடாது.
போலீஸாரைக் குறை சொல்கிறோம், அதற்கு முன் மஞ்சள் கோட்டை நாம் தாண்டாமல் இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆசிரியர்களைக் குறை சொல்வதற்கு முன் நாம் சரியாகப் படிக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.அரசியல்வாதிகளைத் திட்டுவதால் ஒரு பயனும் இல்லை, அதற்கு முன் நாம் நேர்மையாக இருக்கிறோமா என்றுபார்க்க வேண்டும்.
அரசியல்வாதிகளைத் திட்டிப் படம் எடுப்பதும் கூட தேவையில்லாதது என்றே நான் நினைக்கிறேன்.
எனது சம்பளத்தை நான் குறைத்துக் கொள்ள மாட்டேன். எதற்காக குறைக்க வேண்டும்? சுதந்திரத்தில் பாதியைக்குறைத்துக் கொள்வதாக யாராவது கூறினால், நானும் எனது சம்பளத்தில் பாதியைக் குறைத்துக் கொள்கிறேன்.
எனது சம்பளத்தை குறைத்தால் நாட்டுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றால் குறைத்துக் கொள்ளத் தயார்.ஆனால், சில வியாபாரிகளுக்காக குறைக்க வேண்டும் என்று கூறினால் கண்டிப்பாக குறைக்க மாட்டேன்.ஏனென்றால் நானும் அந்த வியாபாரி தான். நானும் படம் தயாரித்து வியாபாரம் செய்து கொண்டிருப்பவன் தான்.
எனது மகள் ஸ்ருதி சினிமாவில் நடிப்பதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். அது அவரது விருப்பம். அவர்எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.அப்படித்தான் எனக்கு என் தாயார் அறிவுரை கூறியிருந்தார்கள். அதையே எனது மகளுக்கும் நான் கூறுகிறேன்.
சண்டியர் பெயர் நீக்கப்பட்ட எனது புதிய படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. அதற்கு குப்புசாமி என்றும்வைக்கலாம், ராமசாமி என்றும் பெயர் சூட்டலாம். விருமாண்டி என்றும் சிலர் கூறுகிறார்கள். அதுவும்நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கலாம் என்றார் கமல்ஹாசன்.
நடிகர் சங்க வளாகத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











