என் உடல்நிலை செய்தியை வைத்து நாடகம் நடத்த நினைத்தவர்கள் ஏமாந்துவிட்டார்களே! - கமல்
எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன், என்று தனக்கே உரிய பாணியில் விளக்கம் வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நெல்லை மற்றும் கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் திடீரென நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி வந்தன. நரம்பு பிரச்சினை என்று சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர்.
ஆனால் கமலின் பிஆர்ஓ, தெளிவாக அவருக்கு உணவு ஒவ்வாமைதான் பிரச்சினை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கமல் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. இந்தச் செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன்.
கேரளாவின் உட்பகுதிகளில் படப்பிடிப்பில் இருந்தோம். அங்கு சரியான உணவகங்கள் இல்லை. அதனால், சாலையோரக் கடைகளில் சாப்பிட்டோம். அங்கே இருந்த தண்ணீரை குடித்தோம். அதன் விளைவாகதான் நான் மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்கு வெறும் உணவு ஒவ்வாமை மட்டுமே ஏற்பட்டுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











