நானும், சிம்புவும் அதை இழந்திருக்கிறோம்.. மூன்று வயதிலிருந்து அனுபவிக்கிறோம்.. கமல்ஹாசன் ஓபன் டாக்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தக் லைஃப். நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலும் மணியும் இணைந்திருக்கிறார்கள். எனவே இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனுடன் சிம்பு முதன்முறையாக நடித்திருப்பதும் படத்தின் மீதான ஆவலை ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஜூன் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் பிஸியாக நடித்துவந்த கமல்ஹாசன் திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலுக்கு சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்தபடி சோபிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலக அளவில் 500 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியது. அந்த வெற்றி கமலுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது.
சறுக்கிய கமல்ஹாசன்: அந்த உற்சாகத்தோடு கிடப்பில் கிடந்த இந்தியன் 2 பட வேலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்படி ஷங்கரிடம் கமல் கூற; ஷங்கரும் படத்தை மீண்டும் தொடங்கினார். ஏற்கனவே வெளியான முதல் பாகம் கல்ட் க்ளாசிக் படமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. எனவே இரண்டாவது பாகமும் கண்டிப்பாக அதே ரிசல்ட்டை கொடுக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் இசை, மேக்கிங், திரைக்கதை என அத்தனை ஏரியாக்களிலும் இயக்குநர் சொதப்பிவைக்க படம் படுதோல்வியை சந்தித்து, ட்ரோலையும் சந்தித்தது.

அடுத்த படம்: இந்தியன் 2 கமலின் கரியரில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. எனவே இன்னொரு ஹிட்டை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் அவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மணிரத்னம் சென்று கமல்ஹாசனிடம் கதை கூற; உடனடியாக ஒத்துக்கொண்டார் கமல். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதுமட்டுமின்றி ஜோஜு ஜார்ஜ், விருமாண்டி அபிராமி என நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்டிஆரின் என்ட்ரி: அவர்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் சிம்புவும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால் எஸ்டிஆர் ரசிகர்களும் குஷியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணைந்திருக்கும் படத்தை முதலில் கமல்தான் தயாரிப்பதாக இருந்தார். அந்தப் பழக்கமும் எஸ்டிஆர் இந்தப் படத்தில் கமிட்டாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ்: கமலும், மணிரத்னமும் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத நாயகன் என்ற படத்தை கொடுத்திருக்கிறார். எனவே தக் லைஃப்பும் அதே மாதிரி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாகவே அதிகரித்திருக்கிறது. படமானது ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
கமலின் பேட்டி: இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசுகையில், "எங்களை நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைத்து எதையும் செய்ய விடாமல் தடுத்துவிட்வுஆர்கள். சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள். அதனால்தான் சிலர் விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். இதை மூன்று வயதிலிருந்து நானும் சிம்புவும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்" என்றார். கமல்ஹாசனின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











