Karthi: பருத்திவீரன் ரூட்டில் வித்தியாசமான முயற்சியா..? கார்த்தி 27 டைட்டில் இது தானா..?
சென்னை: கார்த்தி நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு தீபாவளியில் ஜப்பான் திரைப்படம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தரமாக கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் கார்த்தி. இதனையடுத்து அவரது 27வது படத்தின் டைட்டில் பருத்திவீரன் ரூட்டில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி 27 டைட்டில் அப்டேட்
அமீரின் பருத்திவீரன் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, இதுவரை 25 படங்களில் நடித்துவிட்டார். அவரது 25வது படமாக உருவான ஜப்பான், கடந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. ராஜூ முருகன் இயக்கியிருந்த இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால் படமோ எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.

அதேநேரம் அவரது பருத்திவீரன் சர்ச்சையும் விஸ்வரூபம் எடுத்தது. அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தில் பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் அமீர் குறித்து அவதூறாக பேசியிருந்த ஞானவேல்ராஜா ஒருகட்டத்தில் வருத்தம் தெரிவித்தார். ஆனால், இந்த பஞ்சாயத்தில் கார்த்தி இப்போது வரை வாய் திறக்கவே இல்லை.
ஜப்பான் தோல்வியுடன் பருத்திவீரன் பஞ்சாயத்தும் விரட்டியதால், தனது 26, 27வது படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் கார்த்தி. இதில் கார்த்தி 26 படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். அதேபோல், கார்த்தி 27 படத்தை 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் கார்த்தி மாறி மாறி நடித்து வருகிறார்.
கார்த்தி 26 படத்திற்கு வா வாத்தியாரே என்ற டைட்டில் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கார்த்தி 27 டைட்டிலும் விரைவில் வெளியாகவுள்ளது. கார்த்தியுடன் அரவிந்த் சாமி நடிக்கும் இந்தப் படம் ஃப்ரெண்ட்ஷிப்பை பின்னணியாக வைத்து உருவாகிறதாம். நண்பர்களான கார்த்தியும் அரவிந்த் சாமியும் எதிரிகளாக மாறுவது தான் கதை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு மெய் அழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அழகன், பேரழகன் ஆகிய டைட்டில்களில் படங்கள் வெளியாகிவிட்டன. இதனால் கொஞ்சம் வித்தியாசமாக மெய் அழகன் என தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











