அப்படியே வானத்தை போலதான்.. விஷ்ணு விஷாலை நினைத்து நெகிழ்ந்த கார்த்தி
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் இரண்டு வானம், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் சகோதரர் ருத்ரா என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. இதனால் அவரது கதை தேர்வு அபாரமாக இருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்தது. குறிப்பாக சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத விஷ்ணு விஷால் தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சூப்பர் ஹிட்டான இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார்.இதனால் அவர் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார்.
ராட்சசன்: விஷ்ணு விஷாலின் கரியரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது ராட்சசன். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அவரது மேக்கிங்கும், விஷ்ணு விஷாலின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. அடுத்ததாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
லால் சலாம் அடைந்த படுதோல்வி: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரஜினியின் கெஸ்ட் ரோல் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்தாக விஷ்ணு விஷால் இரண்டு வானம் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் கட்டா குஸ்தி படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகவிருக்கிறது.
சகோதரர் அறிமுகம்: இதற்கிடையே விஷ்ணு விஷாலின் பெரியப்பா மகனான ருத்ரா என்பவர் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷ்ணு விஷால், 'எனது அப்பாவை என்னுடைய பெரியப்பாதான் வேலைக்கு சென்று படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். எனவே அவருடைய மகன் ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த மேடையில் இன்று நான் இருக்க காரணமே என்னுடைய பெரியப்பாதான்" என்றார்.
கார்த்தி நெகிழ்ச்சி: இதனையடுத்து விழாவில் பேசிய கார்த்தி, "விஷ்ணு விஷால் மேடையில் சொன்னதை கேட்டபோது அப்படியே வானத்தை போல் படம் போன்றுதான் இருந்தது. அந்தப் படத்தை போல் உண்மையான வாழ்க்கையிலும் அண்ணன் - தம்பி இருப்பார்களா என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. அது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











