10 ரூபாய்க்கு சாப்பாடு..அன்னதான பிரபுவாக மாறிய ஆயிரத்தில் ஒருவன்.. 750வது நாளை கடந்த கார்த்தி உணவகம்!
சென்னை: கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் நடத்தப்பட்டு வரும் உணவகம் வெற்றிகரமாக 750 நாட்களை கடந்து லட்சக்கணக்கான மக்களின் பசியை ஆற்றியுள்ளது. லாப நோக்கம் இல்லாமல், இந்த உணவகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்களுமே அதிகளவில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அகரம் ஃபவுண்டேஷன், விவசாயிகளுக்கு உதவும் விஷயங்கள் என பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

சர்தார் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் கார்த்தி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு கடந்த ஆண்டே தயாராக இருந்த வா வாத்தியார் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், கைதி படத்தையும் சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.
10 ரூபாய்க்கு உணவு: கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் நடத்தப்பட்டு வரும் உணவகத்தில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிறு பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

750 நாட்களில் ஒரு லட்சம் பேர்: வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள். இந்த உணவகம் தொடங்கி இதுவரை 750 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு உணவு வழங்கும் இந்த சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











