விஜய் இதை செய்ய வேண்டும்.. அரசியல் பிரவேசம் குறித்து கார்த்திக் கொடுத்த அட்வைஸ்.. செய்வாரா தளபதி?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அக்கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. கட்சியின் மாநாடும் இந்த மாதம் நடக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அவரும் அதனை உறுதி செய்யும் விதமாக தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியின் பாடலும், கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இருந்தாலும் சோகம்: தங்கள் தளபதி அரசியலுக்கு வந்துவிட்டாலும் ரசிகர்களிடையே ஒரு சோகம் இருக்கிறது. அதாவது அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருப்பதாக கூறுகிறார். சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க அரசியலில்தான் கவனம் செலுத்தவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போல் தமிழ்நாட்டு அரசியலிலும் தனது தடத்தை ஆழமாக பதித்துவிட வேண்டுமென்ற முழுமுனைப்பில் இருக்கிறார் விஜய். அதற்கான பணிகளையும் ஆரம்பித்திருக்கிறார்.
விரைவில் மாநாடு: கட்சியின் மாநாடு இந்த மாதம் நடக்கவிருக்கிறது. அதற்காக தவெக தொண்டர்கள் இப்போதே தயாராகியிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், 'ஆஃபிஸில் லீவ் கிடைக்கவில்லையென்றாலும் வேலையை விட்டுவிட்டு மாநாட்டுக்கு வாருங்கள்' என அழைக்கும் தொனியில் பேசியிருந்தார். அந்தப் பேச்சை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கொஞ்சம் விஜய் அப்செட் என்று சொல்லப்படுகிறது.
விஜய்யின் பிளான்: விஜய்யை பொறுத்தவரை தனது அரசியல் அஜெண்டாவாக எதனை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது. முக்கியமாக விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து தெரிவிக்காததை சுட்டிக்காட்டி,. விஜய் தவறான வழியில் போகிறாரோ என்று அச்சமாக இருப்பதாக இயக்குநர் மோகன் ஜி பேசியிருந்தார். இப்படி விஜய் முழுக்க முழுக்க அரசியலில் நுழைந்து தனது செயல்பாடுகள் மூலம் மற்றவர்களை பேசவும் வைத்துவிட்டார்.
கார்த்திக் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய நவரச நாயகன் கார்த்திக், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய்யும் அரசியலுக்கு வரட்டும். அவர் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கிறார். ஆனால் இந்த சமயத்தில் அவர் அரசியலுக்கு வருவது பெரிய விஷயம். அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். படங்களில் நடித்துக்கொண்டே அரசியலில் இருக்கலாம். அவர் சொல்ல வரும் கருத்தினை பெரிய திரையில் கூறினால் நல்ல ரீச் கிடைக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











