அஜித்தின் 65ஆவது படம்.. தயாரித்து இயக்கவிருக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?.. வெளியான புது தகவல்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும் வசுல் ரீதியாக சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அவர் தனது 64ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக்கிற்கே கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவரது 65ஆவது படம் பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியிருக்கின்றன.
அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. முதலில் விடாமுயற்சி படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த அந்தப் படம் பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. முதன்முறையாக மகிழுடன் இணைந்த படம் இப்படி மகிழ்ச்சி இல்லாமல் ஆகிவிட்டதே என்ற பேச்சுத்தான் அந்தப் படம் ரிலீஸானபோது ஏகே ரசிகர்களிடம் பெரிய வருத்ததுடன் கூடிய பேச்சாக இருந்தது. குறிப்பாக அதில் எந்த மாஸ் சீனுமே இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் ஓபனாகவே வைத்தார்கள்.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சியில் விட்டதை இதில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ஆதிக் படம் முழுக்க ஏகப்பட்ட மாஸ் சீன்களையும், ரெஃபரன்ஸ் சீன்களையும் வைத்திருந்தார். அதேசமயம் அது கொஞ்சம் ஓவர் டோஸாகவும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படம் ஏகே ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தியை கொடுத்தது.

கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே ஒரே வருடத்தில் இரண்டு அஜித் ரிலீஸாவதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்போதுதான் அப்படி நடந்திருந்தது. அதற்கு ஒரே காரணம் கார் ரேஸ் மட்டும்தான். சினிமாவில் அவர் அறிமுகமானதிலிருந்தே அவர் ஒரு ரேஸ் பிரியர் என்று எல்லோருக்குமே தெரியும். அவரும் சில போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அதன் காரணமாக விபத்துக்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் இப்போதுதான் அவர் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதனால்தான் இரண்டு படங்களின் ஷூட்டிங்கை விறுவிறுவென்று முடித்தார்.
அடுத்த படம்: குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு அவர் நடிக்கவிருக்கும் ஏகே 64 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற கேள்விதான் பலரிடம் எழுந்திருந்தது. அநேகமாக ஆதிக்தான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இப்போது ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார்; இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும்; படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏகே 65 பற்றிய தகவல்: இந்நிலையில் அஜித்தின் 65ஆவது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முழுவதையும் முடித்த கார்த்திக்; அஜித்திடமிருந்து க்ரீன் சிக்னல் வாங்கிவிட்டதாகவும் இந்தப் படத்தை அவரே தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











