காசு இல்லாமல் பல நாள் தவிச்சிருக்கேன்.. ஒரு முறை நண்பனே அப்படி சொல்லிட்டான்.. கவின் உருக்கம்!
சென்னை:பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதுவரை இந்த ஆண்டு வெளியான படங்கள் எதுவுமே படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக பெரிதாக ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பண்ணாத நிலையில், கவினின் ஸ்டார் திரைப்படம் அமோகமாக பிசினஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து மற்றும் ஒரு ஸ்டார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டார் திரைப்படத்தின் டிரைலரை விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு எடிட் செய்து ரசிகர்கள் போட்டு வரும் நிலையில், உண்மையாகவே கவினும் அந்தப் படத்தில் வரும் நாயகன் போல பல கஷ்டங்களை அனுபவித்து தான் சினிமாவில் தற்போது நடிகராக மாறி இருக்கிறார். அது தொடர்பாக அவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சீரியல் முதல் சினிமா 'ஸ்டார்' வரை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சின்னத்திரை நடிகராக அறிமுகமானநடித்து கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ள கவின் முன்னணி நட்சத்திரமாக மாறி வருகிறார்.
சிறப்பான பிசினஸ்: இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ஒரு மே 10 ஆம் தேதி வெளியாகிறது. அந்த படம் இதுவரை ஃப்ரீ ரிலீஸ் பிசினஸாக 7 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் வெளியானால் கண்டிப்பாக 50 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசுக்காக கஷ்டப்பட்டேன்: ஸ்டார் படத்தின் ட்ரைலரில் காசுக்காக கஷ்டப்படும் ஹீரோவாக கவினை காட்டியிருப்பார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் காசு எவ்வளவு பெரிய பிரச்சினையை கொடுக்கிறது என்பதை ஸ்டார் திரைப்படம் தெளிவாக உணர்த்தும் என தெரிகிறது. நடிகர் கவினும் ஆரம்ப காலகட்டத்தில் காசுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன் என தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
நண்பனே அப்படி சொல்லிட்டான்: எனக்கு கிடைத்த நண்பர்கள் ரொம்பவே நல்லவர்கள். மற்றவர்களுக்கு அது போல கிடைப்பார்களா என தெரியாது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் தான் என்னுடைய அனைத்து செலவையும் பார்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆகப் போகிறது. ஒரு இரண்டு மாதங்கள் உன் செலவை நீ பார்த்துக்கோ என ஒரு நண்பன் சொன்னான். அப்போதுதான் அவனுடைய கஷ்டம் புரிந்தது. சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என கவின் அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியுள்ளார்.
ரிஹர்சலே பார்க்கல: இந்த கதையை இளன் சொல்லும் போது என்னை பத்தி வெளியில விசாரிச்சீங்களா? அப்படியே எனக்கான கதையா இருக்கே எனக் கூறினேன். பேப்பர், பண்டல்ட் ஸ்க்ரிப்ட், லேப்டாப் என எதையுமே இளன் எடுத்துட்டு வரல. மனசுல இருந்து கதையை சொன்னாரு. நானும் மனசார உள்வாங்கிக் கொண்டு நடித்தேன். லிப்ட் படத்தின் போது கூட ரிஹர்சல் பண்ணேன். ஆனால், இந்த படத்தில் நடிக்க எந்தவொரு ரிஹர்சலும் பண்ணல என கவின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











