இட்லி கடை நடத்தும் கிங்டம் நடிகர்.. ஒரு காலத்துல மம்மூட்டி கூட நடிச்சவரு.. விஜய் தேவரகொண்டா பெருமிதம்!
ஹைதராபாத்: தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ரிபெல் படத்தில் நடித்த நடிகர் வெங்கடேஷ் மலையாள திரையுலகில் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர். மம்மூட்டி படத்தில் துணை நடிகராக நடித்த வெங்கடேஷ் சுடச்சுட இட்லி எனும் இட்லி கடையை திருவனந்தபுரத்தில் நடத்தி வருவது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அந்த படத்தை விஜய் தேவரகொண்டா ஹைதராபாத், சென்னை என பல நகரங்களுக்குச் சென்று ப்ரோமோட் செய்து வருகிறார்.

சமீபத்தில், முருகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வெங்கடேஷ் என விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். ஷார்ப்பான கண்கள் மற்றும் ஆக்கிரோஷமான நடிப்புத் திறமை கொண்டவர், நிச்சயம் தெலுங்கு திரையுலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்றும் புகழாரம் சூடியிருந்தார்.
இட்லி கடை நடத்தும் வெங்கடேஷ்: மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் எப்படியாவது சினிமாவுக்குள் சென்று சாதிக்க வேண்டும் என போராடி ஒரு சில பெரிய மலையாள படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தெலுங்கில் கிங்டம் படத்தின் மூலம் முக்கிய ரோலில் அறிமுகமாகவுள்ளார். இதற்கிடையே திருவனந்தபுரத்தில் "சுடச்சுட இட்லி" எனும் பெயரில் ஃபுட் டிரக் ஒன்றையும் நடத்தி அங்கு வரும் கஸ்டமர்களுக்கு இவரே உணவுகளை பரிமாறும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மம்மூட்டி படத்தில் கிடைத்த வாய்ப்பு: 2021ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வெங்கடேஷுக்கு கிடைத்தது. அதன் பின்னர் தமிழில் கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரிபெல் படத்திலும் நெகட்டிவ் ரோலில் வெங்கடேஷ் நடித்திருந்தார். சின்னத்திரையை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் தொடர்ந்து தனது உணவு டிரக் பிசினஸையும் நடத்தி வரும் வெங்கடேஷ் டோலிவுட்டில் கிங்டம் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கடேஷை விஜய் தேவரகொண்டா அறிமுகப்படுத்தினார். மேலும், சீக்கிரமே இவர் ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











